| ADDED : மே 30, 2024 11:25 PM
சூலுார்:அறுவடைக்குப் பின் வெங்காயத்தை சேமிக்க உதவும் பட்டறை அமைக்க, தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரா பானு கூறியதாவது:வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு, அறுவடைக்கு பிந்திய பயிர் பாதுகாப்புக்காக, குறைந்த செலவில் சேமிப்பு பட்டறை அமைக்க, தேசிய தோட்டக்கலைத்துறை இயக்கம் மூலம், 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. விலை வீழ்ச்சி அடையும் போது, வெங்காயத்தை பட்டறையில் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது, விற்பனை செய்யலாம். மூன்று முதல் ஆறு மாத காலம் வெங்காயத்தை சேமிக்க இந்த பட்டறை பயன்படும். இத்திட்டத்தில் சேர, சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் மற்றும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பாக இம்மானியத்தை பெற, tnhorticulture.tn.gov.inஎன்ற இணைய தள முகவரிக்கு சென்று பதிவு செய்யலாம். மேலும் தகவல்களுக்கு, தங்கள் பகுதியை சேர்ந்த உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகலாம். அல்லது சூலுார் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை, 0422 2990014 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.