| ADDED : மே 11, 2024 11:21 PM
கோவை : புதிய மென்பொருள் வழியாக வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட்டு, ஓய்வூதியர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு பிடித்தம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.வருமான வரி செலுத்த தகுதி உள்ள, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்கள் பெறும் சம்பளத்தின்படி, செலுத்த வேண்டிய வருமான வரி கணக்கிடப்பட்டு, மாதம் தோறும் புதிய மென்பொருள் வழியாக வருமான வரி பிடித்தம் செய்யும் புதிய நடைமுறை, இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.அதன் அடிப்படையில், ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும், வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பலராமன் கூறியதாவது:வருமான வரி பிடித்தம் செய்யும் புதிய நடைமுறை, ஓய்வூதியர்களை அதிகம் பாதித்துள்ளது. ஓய்வூதியர்களுக்கு எந்த தகவலும் சொல்லாமல், தன்னிச்சையாக வருமான வரியை இஷ்டம் போல் பிடித்தம் செய்துள்ளனர்.பழைய நடைமுறையில், வருமான வரி பிடித்தம் செய்யும் போது, ஓய்வூதியர்களிடம் கடிதம் பெற்று அவர்கள் குறிப்பிடும் தொகை, மாதம் தோறும் பிடித்தம் செய்வது வழக்கமாக இருந்தது.ஆனால் இந்த புதிய மென்பொருள் வந்த பின், அவர்களே தொகையை பிடித்தம் செய்துள்ளனர். வருமான வரி வரம்புக்குள் வராதவர்களுக்கும், வரி பிடித்தம் செய்துள்ளனர்.இதனால் ஓய்வூதியர்கள் வருத்தமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். அதனால் புதிய மென்பொருள் வழியாக வருமான வரி பிடித்தம் செய்யும் முறையை கைவிட்டு, ஓய்வூதியர்களின் ஒப்புதலை பெற்ற பின், பிடித்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.