உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு! வனத்தினுள் விறகு தேட செல்லாதீங்க

யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு! வனத்தினுள் விறகு தேட செல்லாதீங்க

வால்பாறை;வால்பாறை, எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வனத்துக்குள் விறகு தேட செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.கோவை மாவட்ட எல்லையில், வால்பாறை அமைந்துள்ளது. இங்கு, தினமும் மாநிலம் முழுவதிலிமிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். இங்கு சோலையாறு அணை, ஆறுகள், நீர்வீழ்ச்சிகளை கண்டு மகிழ்கின்றனர்.அவ்வகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை மலைப்பகுதியில், பருவமழை தொடர்ந்து பெய்கிறது. வனவளம் செழுமையாக இருப்பதால், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும் யானைகள் தனித்தனியாக பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.குறிப்பாக, குரங்குமுடி, வில்லோனி, பன்னிமேடு, அய்யர்பாடி உள்ளிட்ட எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. யானைகள் பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுகின்றன.இதனால், பகல் நேரத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடமுடியாமல் அச்சத்துடன் உள்ளனர். மேலும், குடியிருப்பு பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகளை யானைகள் உட்கொள்கின்றன. இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் இரவில் துாக்கமின்றி யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பருவமழைக்கு பின் வால்பாறையில் பசுமை திரும்பியுள்ளதால், பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் திருப்திகரமாக இருப்பதால், யானைகள் நிரந்தரமாக இங்கேயே முகாமிட்டுள்ளன.யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்கள் விறகு தேட செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதை உறுதியாக அவர்கள் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.

ஒத்துழைப்பு தேவை

வால்பாறையில், எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் யானைகள் விரும்பி உட்கொள்ளும் வாழை, பலா, கொய்யா போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. யானைகளுக்கு எவ்வித சிரமும் உணவு கிடைப்பதால், குடியிருப்பு பகுதியிலேயே முகாமிடுகின்றன. யானைகளுக்கு பிடித்தமான தோட்ட பயிர்களை குடியிருப்பு பகுதியில் பயிரிட வேண்டாம் என்று வனத்துறையினர் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் அதை எஸ்டேட் நிர்வாகங்கள் கண்டு கொள்ளாததால் தான், எஸ்டேட் பகுதிக்கு யானைகள் வருகை அதிகரித்துள்ளது, என, இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை