பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.ஒருமுறை பயன்படுத்தி வீசியெறியப்படும், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை உள்ளது. இதற்கென, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பிரசாரம் நடைபெற்றும் வருகிறது.உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதம் விதிக்கப்பட்டது.இதனால், பொள்ளாச்சி நகரில், கடந்த காலங்களில் துணிப்பைகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்தன. பூ, பழங்கள், காய்கறிக் கடை, டீ கடைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் இல்லாதிருந்தது. மாறாக, காகித பைகள், துணிப்பைகள், இலைகள், எவர்சில்வர் பாத்திரங்கள் பயன்பாடு அதிகரித்தது.ஆனால், தற்போது, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. சாலையோர பூ மற்றும் பழ வியாபாரிகள், உணவகங்கள், துணிக் கடைகள், டீ கடைகளில், பாலித்தீன் பைகள், டீ கப்புகள் புழக்கத்தில் உள்ளன.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பிளாஸ்டிக் தடை தொடங்கிய சில மாதங்கள் வரை பாலித்தீன் பயன்பாடு வெகுவாகக் குறைந்திருந்தது. அபராத நடவடிக்கைக்கு பயந்து, அதன் பயன்பாடு தவிர்க்கப்பட்டது.ஆனால், தற்போது பாலித்தீன் பைகள், டீ கப்புகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதிகாரிகள் பெயரளவில் சோதனை நடத்தி, நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து வருகின்றனர். தொடர் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாலித்தீன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க முடியும்.இவ்வாறு, கூறினர்.