உடுமலை : உடுமலை ஒன்றிய அலுவலக வளாகத்தில், பாழடைந்து மக்களை அச்சுறுத்தும் வகையிலுள்ள கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில், அதிக ஊராட்சிகள் கொண்ட ஒன்றியங்களில் உடுமலையும் ஒன்றாகும். இந்த ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றிய நிர்வாக அலுவலகம், தளி ரோட்டில் அமைந்துள்ளது.இந்த அலுவலகம் போதிய இடவசதியின்றி செயல்பட்டு வருகிறது. பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.அலுவலக வளாகத்தில், முன்பு, வேளாண்துறையின் வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் செயல்பட்டு வந்தது. இம்மையத்துக்கான ஒட்டுண்ணி மையம் உள்ளிட்ட கட்டமைப்புகளும் இருந்தன.இந்நிலையில், ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்துக்கு, வேளாண் விரிவாக்க மையம் இடமாற்றப்பட்டது. இதையடுத்து, ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்த கட்டடம், பயன்பாடின்றி, பாழடைந்து காணப்படுகிறது.அப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத வாகனங்கள், உபகரணங்கள் துருப்பிடித்து பரிதாப நிலையில் உள்ளது.இதே போல், ஒன்றிய அலுவலக வளாகத்தில், 1994-95ம் ஆண்டில், ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், நடமாடும் கிராமிய கால்நடை கிளை மருந்தக கட்டடம் கட்டப்பட்டது.இந்த கட்டடமும் காட்சிப்பொருளாக மாறி, தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அப்பகுதி முழுவதும் புதர் மண்டி, விஷ ஜந்துகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. அப்பகுதியில் மக்கள் நடமாடவே அச்சப்படும் நிலை உள்ளது.ஏற்கனவே, இடநெருக்கடியில், உடுமலை ஒன்றிய அலுவலகம் தவித்து வரும் நிலையில், பயன்பாடில்லாத கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும்; அப்பகுதியில், ஒன்றிய அலுவலகத்துக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.ஆனால், பல ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுக்கவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.