கோவை : கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின் கீழ், 'டீம் சீ சக்தி' மாணவர்கள் அணி, மொனாக்கோ ஆற்றல் படகு போட்டியில், நான்கு விருதுகளை பெற்று அசத்தியுள்ளனர். உலகளவில் பிரபலமாக, ஒய்.சி.எம்., அமைப்பால் கட்டுப்படுத்தப்படும், எம்.இ.பி.சி., நிறுவனம் சர்வதேச அளவில் உள்ள அணிகளுக்கு, கடல்சார் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையப்படுத்தி போட்டிகளை நடத்தி வருகிறது. மொனாக்கோ நாட்டில் கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை, பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சர்வதேச அளவில், 25 நாடுகளில் 40 பல்கலையை சேர்ந்த, 450 மாணவர்கள் அணிகளாக இதில் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து, மூன்றாம் முறை பங்கேற்றுள்ள ஒரே அணி டீம் சி சக்தி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியில், 13 பேர் இடம் பெற்று இருந்தனர். பல்வேறு சுற்றுக்களின் முடிவில், இன்னோவேடிவ் டிசைன், கம்யூனிகேஷன் மற்றும் மொனாக்கோ டவுன் சிறப்பு விருதுகளை மாணவர்கள் தட்டிச்சென்றனர். இப்போட்டியில் மாணவர்கள், இரண்டை உந்துதல் முறையில், யாழி 3.0 என்ற கண்டுபிடிப்பை பிரதிநிதித்துவப்படுத்தினர். நான்கு விருதுகளை பெற்றது மட்டுமின்றி, சர்வதேச அளவில், இப்போட்டியின் தரவரிசை பட்டியலில், 6ம் இடத்தை கல்லுாரி தக்கவைத்துள்ளது. மாணவர்கள் அணியை குமரகுரு கல்விநிறுவன நிர்வாகிகள், ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.