கோவை : குறிச்சி பிரிவில் இருந்து போத்தனுார் சந்திப்பு வரையுள்ள, ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை நேற்று துவக்கியது. நடைபாதையை ஆக்கிரமித்து 'ஷெட்' அமைத்துள்ள கடைக்காரர்கள், தாமாகவே அகற்றிக் கொள்ள இரு நாட்கள் அவகாசம் பெற்றிருக்கின்றனர்.கோவை - பொள்ளாச்சி ரோட்டில், குறிச்சி பிரிவில் இருந்து போத்தனுார் சந்திப்பு வரை, 2.6 கி.மீ., துாரத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறையால் நான்கு வழிச்சாலை ஏற்படுத்தப்பட்டது. அப்போது, மழை நீர் வடிகால் கட்டப்பட்டு, மையத்தடுப்பு அமைக்கப்பட்டது. ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறியதால், அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையவில்லை.ரோட்டிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அவ்வழியை மற்ற வாகனங்கள் கடப்பதற்கு சிரமம் ஏற்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறையின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகின. சாலையை மேம்படுத்த, தமிழக அரசு ரூ.13 கோடி ஒதுக்கியும், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அரைகுறையாக வேலை செய்திருந்ததால், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகம் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று துவக்கப்பட்டது. குறிச்சி பிரிவில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மழை நீர் வடிகால்களை மூடி, அப்பகுதியை ஆக்கிரமித்து, 'ஷெட்' அமைத்து, கடைகளை பலரும் விஸ்தரிப்பு செய்திருந்தனர். ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகள் முன், வடிகால் மீது போடப்பட்டிருந்த சிலாப் கற்கள் உடைக்கப்பட்டன. கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மழை நீர் செல்லவே வடிகால் கட்டப்பட்டு இருக்கிறது; அடைப்புகள் நீக்கவோ, துார்வாரவோ இடமில்லாமல் மூடி போட்டு, ஆக்கிரமித்திருப்பது தவறு என சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து, தாங்களாகவே 'ஷெட்'டுகளை அகற்றிக் கொள்வதாக, கடைக்காரர்கள் உறுதியளித்தனர். இரு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. உறுதியளித்தபடி அகற்றிக் கொள்ளாவிட்டால், மாநில நெடுஞ்சாலைத்துறை மூலமாக, பொக்லைன் இயந்திரங்களால் இடித்து அகற்றப்படும் என, போத்தனுார் சந்திப்பு வரையுள்ள கடைக்காரர்களுக்கு, நெடுஞ்சாலைத்துறையினரால் மீண்டும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.