உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓசோன் பாதிப்பு தவிர்க்க ஒன்றிணைவோம் வாரீர்! பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ஓசோன் பாதிப்பு தவிர்க்க ஒன்றிணைவோம் வாரீர்! பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சி: ஓசோன் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஐ.நா., சபை ஒவ்வொரு ஆண்டும் செப்., 16-ம் தேதியை ஓசோன் தினமாக கடைபிடிக்கிறது. அவ்வகையில், பள்ளி, கல்லுாரிகளில் ஓசோன் பாதுகாப்பு குறித்து, நேற்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக ஓசோன் தின விழா நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். தொடர்ந்து, ஓசோன் மண்டலம் மற்றும் அதன் பயன்பாடு, சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில் மாணவர்கள் பங்கு குறித்து விளக்கிப் பேசினார்.மேலும், ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் பத்து மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்க வேண்டும் என, அறிவுறுத்தினார். பூமியை ஓசோன் மண்டலம் குடை போல மேலிருந்து காக்கிறது என்பதை விளக்கும் வகையில், மாணவர்கள் ஒன்றிணைந்து அமர்ந்து, அதன் வடிவமைப்பு வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர் பாலமுருகன் உட்பட செய்திருந்தனர்.* ரமணமுதலிபுதுார் தொடக்கப் பள்ளியில் நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் அழகேஸ்வரி தலைமை வகித்தார். ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், புவி வெப்பமடைகிறது. அந்த பாதிப்பை தடுக்க, மாணவர்கள் மரக்கன்றுகள் நடவு செய்யவும், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடவும் அறிவுறுத்தினார்.மேலும், மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, ஓசோன் படலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.* ஆர்.பொன்னாபுரம் டுநிலைப் பள்ளியில், நடந்த ஓசோன் தின விழாவில், தலைமையாசிரியர் பாரிஸ்பேகம் தலைமை வகித்தார். ஓசோன் தினம், ஓசோன் படலம், நேரடியாக பூமியில் வரும் சூரிய கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். அறிவியல் ஆசிரியர் சண்முகசுந்தரம், ஓசோன் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து பேசினார். மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, 'ஓசோன் பாதுகாப்பு' என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.* கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், ஓசோன் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அறிவியல் ஆசிரியர்கள், ஓசோன் பாதிப்புகள் மற்றும் இதை பாதுகாக்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.* மெட்டுவாவி துவக்கப்பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் தலைமையில் ஓசோன் தின விழா நடந்தது. ஓசோன் படலம் பயன்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து வாய்மொழியாகவும், ஓவியங்கள் வாயிலாகவும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், புவி வெப்பம் ஆவதை தடுக்க பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது.* கொல்லபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக ஓசோன் பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடுதல், ஓவியப்போட்டி நடந்தது. ஓசோன் படலம் பாதுகாப்பிற்கு அதிக அளவில் மரங்களை நட்டு, மின் சாதன பொருட்களை சிக்கனமாக பயன்படுத்தவும், பசுமையான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும், என, உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பிளாஸ்டிக்கை எரிக்க மாட்டோம்!

ஆனைமலை, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில், ஓசோன் தின விழிப்புணர்வு பிரசாரம், ரெட்டியாரூர், அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நடந்தது. தலைமையாசிரியர் கிட்டுசாமி, பிரசாரத்தை துவக்கி வைத்தார்.பிரசாரத்தில், ஓசோனை பாதுகாப்போம், மரங்களை நடவு செய்வோம். பிளாஸ்டிக்கை எரிக்க மாட்டோம், என, முழக்கமிட்டு பிரசாரம் செய்தனர்.மாணவர்கள் வீடு விடாக சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்தனர். ஓசோன் பாதிப்பு ஏற்படக்காரணம், பிளாஸ்டிக் தவிர்ப்பது, தொழிற்சாலைகளில் வெளிப்படும் அதிக புகை, தனி வாகன பயன்பாடால் பாதிப்பு ஏற்படுகிறது.காடுகளை அழிப்பது; மனித செயல்பாடுகளின் காரணமாக ஓசோன் படலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றும், ஓசோன் படலம் பாதுகாப்புக்கு அதிகளவு மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்க வேண்டும்.தனி வாகனங்களுக்கு பதிலாக, பொது வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.தேவையற்ற பொருட்களை எரிப்பதை காட்டிலும், பயன்படாத பொருட்களை மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும் என, மாணவர்கள் விளக்கினர். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் மாணவர்களுடன் சென்றார்.பள்ளியில், மாணவ, மாணவியருக்கு ஓசோன் தின விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி - வினா போட்டிகள் நடத்தி, மரக்கன்றுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !