உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு வாங்க கடன்

பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு வாங்க கடன்

அன்னுார்; கறவை மாடு வாங்க, குறைந்த வட்டியில் கடன் தரப்படுவதாக, ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்னுார், மேட்டுப்பாளையம் தாலுகாக்களில், ஊத்துப்பாளையம், ஆலபாளையம், இலுப்பநத்தம், தேரம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில், பால் குளிரூட்டும் மையங்கள் உள்ளன. இவற்றில், தினமும் காலை மற்றும் மாலையில், 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, பால் குளிரூட்டப்பட்டு பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் தலைமையகத்திற்கு அனுப்பப்படுகிறது. அன்னூர் ஆவினுக்கு கீழ் 130 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 9,500 பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.இந்நிலையில் வறட்சி காரணமாக கடந்த ஒரு மாதமாக பால் உற்பத்தி குறைந்து விட்டது. ஆவினுக்கு பால் வழங்குவதும் குறைந்துவிட்டது. இதையடுத்து ஆவின் சார்பில் பால் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று அன்னூர் ஆவின் அலுவலகத்தில் நடந்தது.இதில் செயல் ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். அதிகாரிகள் பேசுகையில், 'பால் கூடுதலாக உற்பத்தி செய்து ஆவினுக்கு வழங்க வேண்டும். தற்போது பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடு வாங்க, ஒரு மாட்டுக்கு 18 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ஒரு உற்பத்தியாளருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.இதற்கு ஏழு சதவீத வட்டி மட்டும் வசூலிக்கப்படும். அதுவும் தவணை தவறாமல் 12 மாதங்களில் சரியாக திருப்பி செலுத்தினால் மூன்று சதவீத வட்டி திருப்பி தரப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கறவை மாடுகள் வாங்கி பால் உற்பத்தியை அதிகரித்து ஆவினுக்கு வழங்க வேண்டும்,' என்றனர்.பால் உற்பத்தியாளர்கள் பேசுகையில், 'பசுந் தீவனம் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் கொள்முதல் விலை கட்டுபடி ஆவதில்லை. மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.இதில் செயல் ஆட்சியர் தனலட்சுமி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் ஜெகநாதன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை