உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோளம் கே 12 ரகம்; இறவையில் 5.8 டன் மகசூல் விதைச்சான்றளிப்பு உதவி இயக்குனர் தகவல்

சோளம் கே 12 ரகம்; இறவையில் 5.8 டன் மகசூல் விதைச்சான்றளிப்பு உதவி இயக்குனர் தகவல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், சோளம் விதைப்பண்ணைகளை கோவை விதைச்சான்றளிப்பு உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.பொள்ளாச்சி அருகே, ஏ.நாகூர், பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள சோளம் விதைப்பண்ணைகளை, கோவை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது:சோளம் 'கே 12' என்ற ரகம், 95 - 100 நாட்களுக்குள் அறுவடை செய்யக்கூடிய குறைந்த வயதுடைய ரகம். மேலும், குளிர்கால மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற ரகமாகும். விவசாயிகளின் தீவன தேவை மற்றும் தானிய தேவையினை சரிவிகிதத்தில் பூர்த்தி செய்யும் ரகமாகும். இதன் சராசரி தானிய மகசூல் மானாவாரியில் ெஹக்டேருக்கு, 3,121 கிலோவும், இறவையில், 5,801 கிலோ கிடைக்கும்.மேலும், தீவனத்தட்டு ெஹக்டருக்கு, 12 மெட்ரிக் டன் வரை கிடைக்கும். இந்த ரக சோளமானது, இலைகளில் கருமை நிறத்தில் காணப்படும். 55 நாட்களில், பூட்டை வெளி வர தொடங்கிவிடும். பூட்டையின் வடிவம் சிறிது நீளமாக இருக்கும். சோள மணிகள், கோள வடிவில் பால் வெண்மை நிறத்தில் காணப்படும்.சோள விதைப்பண்ணையில் மூன்று நிலையில் விதைச்சான்றளிப்பு துறையில் இருந்து வயலாய்வு மேற்கொள்ளப்படும். முதலாம் மற்றும் இரண்டாம் வயலாய்வில் பயிர் வளர்ச்சி, பூக்கும் பருவத்தில் அதாவது, 45 மற்றும், 70 நாட்களில் ஆய்வு செய்யப்படும்.பயிர் விலக்கு துாரம், கலவன் நீக்குதல், தரமான விதை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதார நிலை விதையில், 0.05 சதவீதம் மற்றும் சான்று விதையில், 0.1 சதவீதம் கலவன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.மூன்றாவது வயலாய்வு முதிர்வு பருவத்தில் (90வது நாளில்) கலவன் அகற்றுதல் குறித்த ஆய்வுடன், சோளத்தில் கரிப்புட்டை என்ற நோய் தாக்குதலின் சதவீதம் கண்டறியப்படும்.இந்த வயல் தரங்களில் தேர்ச்சி பெற கூடிய விதைப் பண்ணைகளை அறுவடை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அறுவடை செய்த விதைப்பண்ணைகளின் வயல் மட்ட விதைகள் சுத்தம் செய்து, அங்கீகரிக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. சுத்தம் செய்த குவியலில் இருந்து, விதை மாதிரி எடுத்து அரசு அங்கீகாரம் பெற்ற விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பலாம்.விதை தரங்களில், பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்ற விதைகளை சான்று நிலை என்றால், நீல நிற அட்டைகளும், ஆதார நிலை என்றால் வெள்ளை நிற அட்டைகளும் பொருத்தி, ஒரு கொள்கலனுக்கு, 15 கிலோ என்றளவில் விதைகள் அடைத்து உற்பத்தியாளர் அட்டையுடன் சான்றட்டை பொருத்தி, விதை உற்பத்திக்கு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.எனவே, விவசாயிகள் எதிர்வரும் புரட்டாசி, ஐப்பசி பட்டத்தில் இந்த ரகத்தினை பயிர் செய்வதால் நல்ல மகசூல் பெறலாம். விதைப்பண்ணை அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள், இப்பட்டத்தினை பயன்படுத்தி விதைப்பண்ணைகளை அமைத்தால் விதைச்சான்றளிப்பு துறை வாயிலாக தகுந்த வயலாய்வு பணிகளை மேற்கொண்டு, தரமான விதை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை வழங்கப்படும்.விவசாயிகளுக்கு தேவையான தகவல்களும் அளித்து சிறந்த மகசூல் பெற்று அதிக வருமானம் பெற வழிவகை செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.ஆய்வின் போது, பொள்ளாச்சி விதைச்சான்று அலுவலர் நந்தினி, விதை உதவி அலுவலர் ராமச்சந்திரன், உதயகுமார் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி