| ADDED : மே 16, 2024 02:35 AM
கோவை:ரூ.2.75 கோடி மோசடி செய்த மலையாள சினிமா பட தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.கோவை வடவள்ளி குருசாமி நகரை சேர்ந்தவர் துவாரக் உதயசங்கர்; இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:நான், தற்போது கனடாவில் வசித்து வருகிறேன். கடந்த, 2016ம் ஆண்டு, நான் கத்தாரில் பணிபுரிந்தபோது மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் கொச்சியை சேர்ந்த ஜானி தாமஸ், என்னையும் எனது நண்பர் ஜின்ஸ் என்பவரையும், நண்பர் ஒருவர் வாயிலாக அணுகினார். அப்போது அவர் மீண்டும் மலையாளத் திரைபடங்களை தயாரிக்க உள்ளதாகவும், நிறம் 2, கேம்பஸ் உட்பட, 5 படங்களைத் தயாரிக்க போவதாகவும் தெரிவித்தார். அந்த படங்களுக்கு முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என ஜானி தாமஸ், மற்றும் அவரது மகன் ரான் ஜானி உறுதியளித்தனர். இதையடுத்து நான் ரூ.75 லட்சத்தை முதலீடு செய்தேன். “நான்சென்ஸ்” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பைத் துவங்கினர். அதை தொடர்ந்து படத்தை முடிக்க மேலும், ரூ.2 கோடி கேட்டனர். நானும் ரூ.2 கோடியை கொடுத்தேன். அதன் பின், 2018ம் ஆண்டு எனது பணத்தைத் திரும்பக் கேட்டேன்.அப்போது படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஜானி தாமஸ் எனக்கு ரூ.50 லட்சத்தை மட்டும் லாபமாக கொடுத்தார். மீதி பணத்தை திருப்பிச் கொடுக்காததால் அவர்கள் மீது புகார் அளிக்க போவதாக தெரிவித்த போது அவர்கள் திரைப்பட சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதால் பெயர் கெட்டுவிடும் என்று என்னிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஜானி தாமசின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் பணத்தை சிறிது காலம் கழித்து திருப்பி தருவதாக உறுதியளித்தனர்.அதை நம்பி இன்னும் சிறிது காலம் காத்திருந்தேன். இந்நிலையில் அவரது மனைவி, 2021ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின் அவர்கள் பல சொத்துக்களை வாங்கியிருப்பதும் தெரிய வந்தது. நான் கனடா என்.ஆர்.ஐ., பெற்று உள்ளதால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கனடாவில் உள்ள துாதரகத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர். பணத்தை வடவள்ளியில் இருந்த போது பரிவர்த்தனை செய்ததால் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தேன். இதனை அறிந்த அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே தந்தை ஜானி தாமஸ், மற்றும் மகன் ரான் ஜானி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து அவர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழக்கினர். இந்நிலையில் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற ஜானி தாமசை கொச்சி போலீசார் நெடும்பாசேரி விமான நிலையத்தில் வைத்து மடக்கி பிடித்தனர். பின் கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று ஜானி தாமசை கைது செய்து அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.