பொள்ளாச்சி:பதட்டமான ஓட்டுச்சாவடிகளில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியான முறையில் உள்ளதா என உறுதி செய்ய நுண்பார்வையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களை கண்காணிப்பதற்காக, பொதுப்பார்வையாளர், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்னையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், நகரப்பகுதியில், 821, கிராமப்புற பகுதியில், 880 என, மொத்தம், 1,701 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில், தொண்டாமுத்துார், 40, கிணத்துக்கடவு, 44, பொள்ளாச்சி, 29, வால்பாறை, 12, உடுமலை, 14, மடத்துக்குளம், 7 என, மொத்தம், 146 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.அவ்வகையில், பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க, நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறியதாவது:நுண்பார்வையாளர்கள், பதட்டமான ஓட்டுச்சாவடிகளைக் கண்காணித்து நேரடியாக பொதுப்பார்வையாளருக்கு தகவல்களை தெரிவிப்பர். ஓட்டுப்பதிவு நாளன்று, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியான முறையில் உள்ளதா என உறுதி செய்வர்.மேலும், ஓட்டுச்சாவடி முகவர்கள், தங்களது அடையாள அட்டை சரியானதா எனவும், வாக்காளர்கள் ஓட்டளிக்க வரும்போது, தேர்தல் அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷனால் அறிவுறுத்தப்பட்ட, 12 வகையான அடையாள அட்டைகள் வாயிலாக ஓட்டளிக்க வழிவகையும் செய்வர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.