| ADDED : ஏப் 11, 2024 04:54 AM
அன்னூர் : பால் வழங்கி 41 நாட்களாகியும் ஊக்கத்தொகை வழங்காததால், உற்பத்தியாளர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு நான்கு லட்சம் பால் உற்பத்தியாளர்கள், தினமும் 32 லட்சம் லிட்டர் பால் வழங்கி வருகின்றனர். பால் கொள்முதல் விலை கட்டுபடியாகவில்லை என தொடர்ந்து போராட்டம் நடத்தி, கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து தமிழக அரசு கடந்தாண்டு டிச., 18ம் தேதி முதல், பாலுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அறிவித்த பிறகு இரண்டு முறை மட்டுமே, டிச., ஜன.,யில் வழங்கிய பாலுக்கு, கணக்கிட்டு ஊக்கத்தொகை வழங்கினர்.அதன் பிறகு, மார்ச் 1ம் தேதி முதல் ஏப்.,10ம் தேதி வரை வழங்கப்பட்ட பாலுக்கு, இதுவரை ஊக்கத்தொகை வழங்கவில்லை.அன்னூர் பகுதி பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'ஆவினில் சராசரியாக ஒரு லிட்டருக்கு 35 ரூபாய் தருகின்றனர். தீவன செலவை கணக்கிட்டால் எதுவும் மிஞ்சுவதில்லை. இந்நிலையில் மூன்று ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்ததால், சிறு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் மார்ச் 1ம் தேதி முதல் ஏப்., 10-ம் தேதி வரை வழங்கிய பாலுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்கவில்லை' என்றனர்.