உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்கறிகள் விலை உயர்வுக்கு பருவமழை காரணம்; வியாபாரிகள் தகவல்

காய்கறிகள் விலை உயர்வுக்கு பருவமழை காரணம்; வியாபாரிகள் தகவல்

மேட்டுப்பாளையம்;பீன்ஸ் ஒரு கிலோ 140 ரூபாய், மற்ற மலை காய்கறிகள் விலை உயர்வுக்கு, சரியான பருவமழை பெய்யாதது தான், காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், புளுஹில்ஸ் அருகே, 70க்கும் மேற்பட்ட மொத்த காய்கறி மண்டிகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்திலும், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விளையும் இங்கிலீஸ் காய்கறிகள் கேரட், பீன்ஸ், பீட்ரூட், டர்னிப், முட்டைக்கோஸ், மேரக்காய் ஆகியவை இங்கு கொண்டு வரப்பட்டு ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. நாளொன்றுக்கு குறைந்தபட்சம், 200 டன், அதிகபட்சம், 300 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த காய்கறிகள் அதிக அளவில் கேரள மாநிலத்திற்கும், குறைந்த அளவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், லாரிகள் வாயிலாக தினமும் அனுப்பப்படுகின்றன. காய்கறி மண்டிகளில் அலுவலர்கள், பணியாளர்கள், மூட்டைகளை லாரிகளில் இறக்கி, ஏற்றும் கலாசு தொழிலாளர்கள் என, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு பல லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகின்றன. சமீபகாலமாக காய்கறிகளின் விலை, அபரிவிதமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், கிலோ கணக்கில் வாங்கி வந்த பொதுமக்கள், கிராம் கணக்கில் வாங்கி வருகின்றனர். விலை உயர்வு குறித்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகள் வர்த்தக சபை செயற்குழு உறுப்பினர் ஹக்கீம் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளை பயிர் செய்த போது, பருவ மழை பெய்யவில்லை. இருந்த தண்ணீரை பயன்படுத்தி, காய்கறி செடிகள் ஓரளவு வந்த பின், தொடர்ச்சியாக கன மழை பெய்துள்ளது. இதனால் காய்கறிகளின் மகசூல் பாதியாக குறைந்தது. காய்கறிகளின் தேவை அதிகரித்து, ஆனால் பற்றாக்குறை ஏற்பட்டதால், காய்கறிகளின் விலை அபரிவிதமாக உயர்ந்துள்ளது. காய்கறி விலை உயர்வுக்கு, இதுவும் காரணமாகும். மண்டிகளில் ஒரு கிலோ பீன்ஸ் குறைந்தபட்சம் 100, அதிகப்பட்சம் 120 ரூபாய்க்கு, கேரட் குறைந்தபட்சம், 40 அதிகபட்சம் 50 க்கும், பீட்ரூட் 25 அதிகபட்சம் 40, முட்டைக்கோஸ் குறைந்தபட்சம், 12 அதிகபட்சம், 17 ரூபாய்க்கும் என, அனைத்து இங்கிலீஷ் காய்கறிகள் விலையும் உயர்வாக உள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் ஆகிய காய்கறிகள் அறுவடை இன்னும் துவங்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் விளையும் இங்கிலீஷ் காய்கறிகள் மட்டுமே, தற்போது விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும். அடுத்த மாதம் ஆந்திரா, கர்நாடகத்தில் இங்கிலீஷ் காய்கறிகள் அறுவடை துவங்கும். அப்போது காய்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு செயற்குழு உறுப்பினர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை