உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுச்சாவடிகளில் முழுமையான வசதி தேவை! ஓட்டுப்பதிவு அலுவலர்கள் எதிர்பார்ப்பு

ஓட்டுச்சாவடிகளில் முழுமையான வசதி தேவை! ஓட்டுப்பதிவு அலுவலர்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி, : கிராமங்களில் உள்ள ஒன்றிய பள்ளிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு தேவையான வசதிகளை முழுமையாக செய்து தர வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், நாளை லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. அவ்வகையில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், 1,701 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச் சாவடிகளில், பி.ஓ., (பூத் அலுவலர்) பி.ஓ., 1 முதல் பி.ஓ., 4 வரையிலான பணிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர்.மேலும், மைக்ரோ அப்சர்வர்கள், மற்றும் வீடியோ கண்காணிப்பாளர்களும் பணிபுரிவர். இவர்களுக்கான பணி ஒதுக்கீடு உத்தரவு இன்று வழங்கப்படவும் உள்ளது.அதன்படி, இவர்கள், காலை, 11:00 மணிக்கு, அந்தந்த ஓட்டுச்சாவடிக்குச் சென்று விடுவர். அங்கேயே தங்கவும் உள்ளனர். நாளை, காலை, 5:45 மணிக்கு, ஓட்டுப்பதிவுக்கான பணிகள் துவங்கி விடும்.குறிப்பாக, தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் வரை, இவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், சில ஓட்டுச்சாவடிகள், கிராமங்களில் அமைந்துள்ளதால், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு சரிவர உணவு கிடைக்காது; தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேவையான நேரத்தில் உணவு அளிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.தேர்தல் பணி அரசு அலுவலர்கள் கூறியதாவது:பல கிராமங்களில் ஒன்றிய பள்ளிகளில் போதிய வசதி இல்லை. குறிப்பாக, கழிப்பறை வசதிகள் குறைவு. ஒரே பள்ளியில் 5 முதல் 7 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. எனவே, அப்பள்ளியில், 30 பேர் வரை தங்கும் நிலை ஏற்படுகிறது.மேலும், உணவுக்கும் பெரும் பிரச்னை ஏற்படுகிறது. ஓட்டுப்பதிவு நாள் என்பதால் பெரும்பாலான கடைகள் மூடப்படும். வழக்கமாக, கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் ஓட்டுச்சாவடி முகவர்கள், உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்குவர்.ஆனால், ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி வருவாய் அலுவலர்களும் அங்கிருந்து, புறப்பட்டு விடுவர். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அலுவலர்கள் எடுத்துச் சென்ற பின்னரே அலுவலர்கள் கிளம்ப வேண்டும்.பல இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, இரவு 2:00 மணிக்கு பின்னரும் வந்து எடுத்துச் செல்வார்கள், இதனால், தேர்தல் அலுவலர்கள் பெரிதும் அவதிப்படுவர். எனவே, இப்பிரச்னையை தீர்க்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ