| ADDED : ஜூலை 29, 2024 08:54 PM
கோவை;மாஞ்சோலையில் இருந்தவர்களை அங்கிருந்து வெளியேற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:ஆறு தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசித்து வரும் மக்கள் அங்கிருந்து தங்களை வெளியேற்றக்கூடாது, தங்களது வாழ்வாதாரத்தை அப்பகுதியிலேயே ஏற்படுத்தி தர வேண்டும் என கூறி வருகின்றனர். இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.மாஞ்சோலையில் நிலவும் காலநிலைக்கு பழக்கப்பட்ட அப்பகுதியினரை, 600 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வனத்துக்கு வெளியே ஏற்படுத்த சிந்திப்பது இயற்கைக்கு முரணானது. இது, 2006 வன உரிமைச்சட்டத்துக்கும் எதிரானது.விருப்ப ஓய்வுத்திட்டம் என்ற பெயரில் தொழிலாளர்களிடம் கட்டாயமாக கையெழுத்து வாங்கியது குறித்து அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையில் நியாயம் இல்லை. மாஞ்சோலையை விட்டு வெளியே செல்கிறோம் என, எந்த தொழிலாளியும் கூறவில்லை. வனஉரிமை பாதுகாப்பு சட்டம், 2006ன் படி, மக்கள் வாழ்வுரிமை அங்கேயே பாதுகாக்கப்பட வேண்டும். அதுகுறித்து குறிப்பிடாமல், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு சலுகைகளை அள்ளித்தரும் என, தங்கம் தென்னரசு கூறியிருப்பது வியப்பாக உள்ளது. இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள சலுகைகள் தான்.மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் வனம் சார்ந்த வேளாண்மைக்கும், அதை விரிவுபடுத்துவதற்கும் அரசு உதவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து, அவர்களை யாசகர்களாக மாற்ற அரசு முயற்சிக்கிறது. மாஞ்சோலை மக்களை வெளியேற்ற அரசு நினைப்பது, தங்கம் தென்னரசின் அறிக்கையில் இருந்து தெளிவாகியுள்ளது. உதவி என்ற பெயரில் அரசு கொடுக்கும் சலுகைகள், தேன் தடவிய விஷத்துக்கு ஈடானது.பல ஆண்டுகள் அங்கிருந்த மக்களால் வனவிலங்குகள், இயற்கைக்கு எவ்விதி பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக இயற்கை செழிக்கவே உதவினர். எனவே, மாஞ்சோலையில் இருந்தவர்களை அங்கிருந்து வெளியேற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.