உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வில்லை! வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வில்லை! வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காததால், வாகன ஓட்டுநர்கள் அதிருப்தியில் உள்ளனர்.பொள்ளாச்சி நகரில், வணிகக் கடைகளும், தொழில் நிறுவனங்களும் பெருகி வருகின்றன. சமீபகாலமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், கோவை ரோடு, பல்லடம் ரோடு, வால்பாறை ரோடு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில், காலை மற்றும் மாலை நேரங்களில், வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து செல்ல வேண்டியுள்ளது.நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, 'ரவுண்டானா' அமைக்கப்பட்டும், போக்குவரத்து விதிகள் அறியாத வாகன ஓட்டுநர்களால், நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. நகரில், வாகன எண்ணிக்கையும் அதிகரித்தும், சாலை மற்றும் பார்க்கிங் வசதி மேம்படுத்தப்படவில்லை.தெப்பக்குளம் வீதி, மார்க்கெட் ரோடு, வெங்கட்ரமணன் வீதி என, முக்கியமான இடங்களில், பல ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்ட அதே சாலைதான் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன.இந்த பகுதிகள், அவ்வப்போது பழுது பார்க்கப்படுகிறதே தவிர, வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப விரிவுபடுத்தப்படவில்லை.இதேபோல, வணிக வளாகங்களின் தரைதளத்தில் 'பார்க்கிங்' அமைக்குமாறு உள்ளூர் திட்டக் குழுமம் சார்பில் அறிவுறுத்தப்பட்டும், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை. கடைவீதி, நியூஸ்கீம் ரோடு, கோவை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில், வளாகங்களின் முன்புள்ள பிரதான சாலைகளில், மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தி செல்கின்றனர்.ரோட்டின் பாதி இடம் 'பார்க்கிங்' தளமாக மாறி, போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே, நகரில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நெரிசல் ஏற்படாத வகையில் சாலைகள் விரிவாக்கம் செய்ய வேண்டும்.தன்னார்வலர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி நகராட்சியில், வீட்டுவரி, குடிநீர் வரி, குப்பை சேகரிப்புக்கான கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை