கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில், கழிவு நீர் வழிந்தோடுவதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில், அதிகளவில் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த ரோடானது, 5 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளதால், இவ்வழியில் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது.இந்த ரோட்டில் ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் மட்டும் இன்றி, எதிர் திசையிலும் அதிகமாக வாகனங்கள் பயணிக்கிறது. இப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள், பள்ளி, கல்லுாரி மற்றும் தேவாலயம் போன்றவைகள் உள்ளது. இதனால் இந்த ரோடு போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது.இந்த சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில், கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயும் சேதமடைந்து இருப்பதால், கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. ரோட்டில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.மேலும், வாகன ஓட்டுநர்கள் வேகமாக செல்வதால், ரோட்டின் ஓரத்தில் செல்பவர்கள் மீது கழிவு நீர் தெறிக்கிறது. மேலும், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.போக்குவரத்து நெரிசல், வாகன விபத்து, பாதசாரிகளுக்கு நடைபாதை இன்மை போன்ற பல பிரச்னைகளால் மக்கள் ஏற்கனவே அவதிப்படுகின்றனர். இந்நிலையில், கழிவுநீர் வழிந்தோடும் பிரச்னை பெரும் தலைவலியாக மாறியுள்ளது.இதை சரி செய்யும் நோக்கில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என, பல முறை மனு வழங்கப்பட்டது. இந்த ரோட்டை மாவட்ட கலெக்டர், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் நேரில் ஆய்வு செய்தும், தற்போது வரை இந்த ரோட்டுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.இதை தீர்க்கும் விதமாக, ரோடு அகலப்படுத்தி, வடிகால் கட்டும் பணிக்கு கடந்த ஆண்டு அளவீடு செய்யப்பட்டது. அதன்பின் ரோடு அகலப்படுத்தும் பணி என்ன ஆனது என தெரியவில்லை.தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், இப்பணி துவங்கப்பட்டால், கால்வாய், போக்குவரத்து நெரிசல், நடைபாதை என அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரே ரோட்டில், ஏராளமான பிரச்னைகள் நிலவுவதால், தீர்வை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.