உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐ.சி.யு.,வில் சேர்ந்த ஆறு மணி நேரத்துக்குள் நிபுணத்துவ ஆலோசனை வழங்க உத்தரவு

ஐ.சி.யு.,வில் சேர்ந்த ஆறு மணி நேரத்துக்குள் நிபுணத்துவ ஆலோசனை வழங்க உத்தரவு

கோவை : அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, தேவையான அனைத்து நிபுணத்துவ டாக்டர்களின் ஆலோசனைகளையும், ஆறு மணி நேரத்துக்குள் வழங்க வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.விபத்து மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட, உடனடி சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு, தேவையான உயர் சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம்(டாய்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி நோயாளிகள், அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப, சிவப்பு, பச்சை, மஞ்சள் என, மூன்று வார்டுகளில் அனுமதிக்கப்படுவர்.அவர்களை, குறிப்பிட்ட நேரத்துக்குள் சம்மந்தப்பட்ட துறைக்கு மாற்றி, அங்கு சிகிச்சை தொடர வேண்டும். ஆனால் விபத்து, அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், நிபுணத்துவ டாக்டர்களின் ஆலோசனைகளை பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தால், உயிரிழப்புகள் ஏற்படுவதாக, புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'டாய்' வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, தேவையான அனைத்து நிபுணத்துவ டாக்டர்களின் கருத்துகளையும், ஆறு மணி நேரத்துக்குள் பெற்று, அதற்குரிய சிகிச்சையை விரைந்து வழங்க வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

உயிரிழப்புகள் ஏற்பட்டதாக புகார்

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அவசர வார்டுகளில் அனுமதிக்கப்படும் நோயாளி களுக்கு மூளை, நரம்பியல், எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை, இருதயம் உள்ளிட்ட பல்வேறு நிபுணத்துவ டாக்டர்களின் ஆலோசனைகள் அவசியம். ஒரு சில நேரங்களில், இந்த ஆலோசனைகள் கிடைக்க தாமதமாகிறது. இதனால், சிகிச்சை தொடர்பாக உடனடியாக ஒரு முடிவுக்கு வர, நோயாளிகள் மற்றும் உறவினர்களால் முடிவதில்லை. இதனால் ஏற்படும் காலதாமதத்தால், ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதைக்கருத்தில் கொண்டே, இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், நோயாளிகளுக்கு தேவையான உயர் சிகிச்சைகள் காலதாமதமின்றி கிடைக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ