| ADDED : ஜூன் 21, 2024 11:59 PM
பொள்ளாச்சி;பவுர்ணமியை முன்னிட்டு, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் அதிகளவு பயணியர் திரண்டதால், 'டிக்கெட்' வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.பாலக்காட்டில் இருந்து திருச்செந்துாருக்கு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சிக்கு காலை, 7:10 மணிக்கு வந்து, 7:15 மணிக்கு ரயில் கிளம்புகிறது. இந்த ரயிலுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.இந்நிலையில், நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, கோவிலுக்கு செல்ல பொதுமக்கள் அதிகளவு ஆர்வம் காட்டினர். அதில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 'டிக்கெட்' வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இது வரை இல்லாத அளவுக்கு கூட்டம் இருந்ததால், டிக்கெட் கொடுப்பவர்கள் திணறினர்.ரயில் பயணியர் கூறியதாவது:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், ஒரு 'கவுன்டர்' மட்டுமே உள்ளது. இதனால், டிக்கெட் வாங்க அதிக நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.திருச்செந்துார் கோவிலுக்கு செல்ல அதிகளவு பயணியர் திரண்டனர். இதனால், 'டிக்கெட்' வாங்க நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதை தவிர்க்க கூடுதல், 'கவுன்டர்' துவங்க வேண்டும். மேலும், 'யுடிஎஸ்' மொபைல் ஆப்பில் டிக்கெட் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.திருச்செந்துார் ரயிலில் நேற்று பொள்ளாச்சியிலேயே அதிகளவு கூட்டம் காணப்பட்டது. உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பயணியர் ஏறும் போது மேலும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதனால், பயணியர் நின்று கொண்டே பயணித்தனர். பயணியர் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் நான்கு பெட்டிகள் வரை கூடுதலாக இணைக்க வேண்டும். முன்பதிவு செய்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.