பொள்ளாச்சி;பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பொள்ளாச்சி பகுதியில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.அப்போது, பொள்ளாச்சி நகரில், வாகன நெரிசலை குறைக்கும் திட்டமாக, 50.35 கோடி ரூபாய் மதிப்பில், மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம், கடந்த 2021, ஜன., மாதம் துவங்கப்பட்டது. பணிகள் துவங்கி, நான்கு மாதங்களிலேயே அதன் திட்ட மதிப்பு, 73 கோடியாக உயர்த்தப்பட்டது.இதற்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 34,718 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த, 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டியிருந்தது.ஆனால், இதற்கான நிதியில், 4 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டதால், தற்போது பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திட்டப் பணி, கிடப்பில் போடப்பட்டதால், பொள்ளாச்சி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இது குறித்து மக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை, 9 கி.மீ., வரை நீள்கிறது. இந்த சாலை அமையும் பகுதியில், ஜமீன் ஊத்துக்குளி, நல்லுார், தாளக்கரை, ஆர்.பொன்னாபுரம், ஆச்சிப்பட்டி போன்ற கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.இந்தச் சாலை அமைந்தால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எளிதாக பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்.பொள்ளாச்சி நகரில் நெரிசல் குறையும். இப்பணிகள் மேற்கொள்ள தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அக்., மாதத்திற்குள் முடிக்கப்படும் என, கடந்தாண்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பணிகள், இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறையினரும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.