உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு நல்ல தலைவனுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்! பா.ஜ.,விவசாய பிரிவு மாநில தலைவர் பேட்டி

ஒரு நல்ல தலைவனுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்! பா.ஜ.,விவசாய பிரிவு மாநில தலைவர் பேட்டி

கோவை;''நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அண்ணாமலைக்கு அமோக ஆதரவு தெரிவித்து, மக்கள் மிகப்பெரியஅமைதிப் புரட்சி செய்துள்ளனர். ஒரு நல்ல தலைவனுக்காக, அனைவரும் காத்திருப்பதை உணர முடிகிறது,'' என்கிறார் பா.ஜ., விவசாய பிரிவு மாநில தலைவர் நாகராஜ்.இரண்டு தினங்களுக்கு முன் காலையில் போனில் அழைத்து பேசிய பா.ஜ.,விவசாய பிரிவு மாநில தலைவர் நாகராஜ், இந்த தேர்தலில், ''நான் பல அதிசயங்களை பார்த்தேன். ஒரு மாற்றத்தை, கோவையும் தமிழகமும் சந்திக்க போகிறது. அதற்கு அடித்தளமிட்ட சில நிகழ்வுகளை, கோவை மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,'' என்றார்.அவரை அவரது இல்லத்தில் சந்தித்தோம். மிகவும் உணர்ச்சிகரமாக அவர் அளித்த பேட்டியில் இருந்து...கோவை லோக்சபா தொகுதியில், போட்டியிட்ட பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை குறித்து, இந்தியாவில் இருந்து மட்டுமல்ல, பல்வேறு உலக நாடுகளில் இருந்தும், அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.நடைபெற்று முடிந்த தேர்தலில், ஐந்து வயது குழந்தை முதல், 85 வயது பெரியவர் வரை அனைவரும் அண்ணாமலைக்கு ஆதரவு அளித்தது, மிகவும் பெருமையாக உள்ளது.ஐந்து வயது சிறுவர்கள் சிலர், 'நாங்கள் பெரியவர்கள் ஆனதும் உங்களுக்குத்தான் ஓட்டு' என்று சொன்னது பெருமிதத்தை ஏற்படுத்தியது. அரசியல் ஒரு சாக்கடை என்று நினைத்து எதிர்த்த, பல மகளிர், அண்ணாமலைக்காக அரசியலுக்கு வந்தது, மிகப்பெரிய புரட்சியாகும்.

திரும்பிய எம்.ஜி.ஆர்., காலம்

நான் சிறுவனாக இருந்த போது, எம்.ஜி.ஆர்., வருகைக்காக மக்கள் விடிய விடிய, உணர்ச்சிப்பெருக்கோடு அவரை பார்க்க காத்திருந்ததை பார்த்திருக்கிறேன். அதே போன்ற மக்கள் எழுச்சியையும், உணர்ச்சிப்பெருக்கையும் அண்ணாமலை வருகைக்காக, மக்கள் காத்திருந்தபோது பார்க்க முடிந்தது.எதிர்கால அரசியலுக்கு, ஒரு நல்ல தலைவனை மக்கள் தேடுவதை புரிந்துகொள்ள முடிகிறது. எம்.ஜி.ஆர்., திரைப்படத்தின் வாயிலாக, மக்கள் மனதில் இடம் பிடித்தார்.ஆனால் அண்ணாமலை, குறுகிய காலத்தில் தி.மு.க., செய்த ஊழல்களை மக்களிடம் சென்றடைய செய்தார். அதோடு, எதிர்கால அரசியல் எப்படி இருக்க வேண்டும். ஒரு தலைவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதை, அடையாளப்படுத்தினார்.

ஒரே நாளில் 12 அமைப்பினர்

ஒரு நாள் காலை 6:00 மணிக்கு துவங்கிய கலந்துரையாடல் கூட்டம், நள்ளிரவு 12:00 மணி வரை நடந்தது. அன்று மொத்தம் 12 அமைப்பினர் சந்தித்தனர்.'தாம்பிராஸ்' அமைப்பு சார்பில், 500 பேர் வந்து அண்ணாமலையை நேரில் சந்தித்தனர். அவர்களுக்குள் வாட்ஸ் அப்குழுக்களை துவங்கி பிரசாரம் மேற்கொண்டனர். களத்தில் இறங்கி அண்ணாமலைக்காக வேலை பார்த்தனர்.ஆனால் தேர்தல் நடந்து முடிந்ததும், சரியான ஓட்டுபதிவு சதவீதத்தை அறிவிக்க முடியாமல் தத்தளித்தார் கோவை கலெக்டர். எவ்வளவோ விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்ட காலத்தில், மூன்று முறை ஓட்டுப்பதிவு சதவீதத்தை மாற்றி, மாற்றி அறிவிக்கிறது மாவட்ட நிர்வாகமும், தேர்தல் கமிஷனும்.தேர்தலில் அண்ணாமலைக்கு, மக்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து துறை மட்டுமல்ல, அனைத்து பிரிவு மக்களின் ஆதரவோடு, 50 சதவீத ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

விடிவுக்கு காத்திருப்பு

70 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கு, முடிவு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர். பெரும்பான்மையான பூத்களில் பணிபுரிய, பா.ஜ., சார்பில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர் களமிறங்கியிருந்தனர். ஒரு மாற்றத்தை எதிர்நோக்கியே அவர்கள் களமிறங்கியுள்ளனர்.தி.மு.க.,வும் சரி, அ.தி.மு.க.,வும் சரி; போட்டி போட்டுக்கொண்டு பணத்தை மக்களுக்கு வாரி இறைத்துள்ளன. அதைப்பெற்றுக்கொண்ட மக்கள், அண்ணாமலைக்கு ஓட்டு அளித்து விட்டு, வெற்றி அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இவ்வாறு, நாகராஜ் கூறினார்.

பிரசாரத்தில் களமிறங்கிய டாக்டர்கள்!

நாகராஜ் மேலும் கூறியதாவது:n பெங்களூரிலிருந்து சைக்கிளில் ஒருவர் அண்ணாமலைக்காக பிரசாரம் செய்ய வந்திருந்தார். ஜி.பே., டிசைன் செய்தவர் களத்தில் இறங்கி, ஒரு ஏரியாவை தேர்வு செய்து பிரசாரம் மேற்கொண்டார்.n அமெரிக்காவிலிருந்து வந்த இரு தோல் நோய் சிறப்பு மருத்துவர்கள், கோவையில் பிரசாரம் செய்தனர். இப்படி தொடர்ச்சியாக பலரும் வந்தனர். அவர்கள் பிரசாரம் மேற்கொள்ள வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுத்தோம்.n ராயல்கேர் மருத்துவமனையில் பணிபுரியும், பிரபல டாக்டர் ஒருவர் வலுக்கட்டாயமாக வந்து, பிரசாரம் செய்ய தனக்கு ஏரியா பிரித்து தருமாரு கேட்டார். அடுத்தநாள் அவர் மைக்கை பிடித்து, பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அவருடன் அவரது மனைவியும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்