உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கணும்! தொழில்வர்த்தக சபை கூட்டத்தில் தீர்மானம்

பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கணும்! தொழில்வர்த்தக சபை கூட்டத்தில் தீர்மானம்

பொள்ளாச்சி:'பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தொழில்வர்த்தக சபை பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை, 43வது வருடாந்திர பேரவை கூட்டம் மற்றும் ஆண்டு விழா, வர்த்தக சபை கூட்ட அரங்கில் நடந்தது. தொழில் வர்த்தக சபை துணை தலைவர் லட்சுமணன் வரவேற்றார். தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.பொருளாளர் சந்திரன், வரவு, செலவு அறிக்கையை வாசித்தார். செயலாளர் கண்ணன் ஆண்டறிக்கை படித்தார். உப தலைவர் முத்துசாமி, மறைந்த முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், புகைப்பட தொகுப்பை வெளியிட்டார்.இணை செயலாளர் ஆனந்தகுமார், 2024-25ம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்தும், இணை செயலாளர் பாலாஜி கூட்ட தீர்மானங்கள் குறித்தும் பேசினர். இணை செயலாளர் நாகமாணிக்கம் நன்றி கூறினார். மறைந்த முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், வயநாடு நிலச்சரிவில் இறந்தோருக்குஇரங்கல் தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பொள்ளாச்சி மற்றும் ஐந்து தாலுகாக்களை உள்ளடக்கிய, 2,771 சதுர கி.மீ., பரப்பளவும், 13 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ளது. பொள்ளாச்சி தனி மாவட்ட அந்தஸ்தை முன்னாள் முதல்வர் தலைமையில் இருந்த அரசு வழங்க இசைந்து, அதற்கான பூர்வாங்க பணிகள் நடத்தப்பட்டு, அரசுக்கு சமர்பிக்கப்பட்டது.தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் அறிவிப்பு வரும் போதெல்லாம், பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு மேலோங்குகிறது. பொள்ளாச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கனவான, பொள்ளாச்சி மாவட்டம் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.தென்னக ரயில்வே, பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ரயில்வே சந்திப்பில், புதிய ரயில்கள் தேவை அதிகரித்துள்ளது. கோவை - பெங்களூரு இடையிலான உதய் எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி வழியாக நீட்டிப்பு செய்ய வேண்டும். அதற்கான ஆய்வுகளும், முன்னோட்டமும் நடைபெற்றுள்ளது. எனவே, இதனை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சி திருவிழா என்ற பெயரில், சுற்றுலா வளர்ச்சி பற்றிய ஒரு முன்னெடுப்பை அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை