கோவை:கோவை நகரின் நுரையீரலாக விளங்கும் ரேஸ்கோர்ஸ், முழுக்க முழுக்க விளம்பர மையமாகவும், வியாபார ஸ்தலமாகவும் மாறி வருவது, மாநகர மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சென்னைக்கு மெரினா பீச் போன்று, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கோவை மாநகருக்கு, காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான ஒரே இடம், ரேஸ்கோர்ஸ்தான். இப்பகுதியிலுள்ள ஏராளமான மரங்களாலும், நீள் வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதையாலும், கோவையின் நுரையீரலாக பந்தயச்சாலை போற்றப்படுகிறது.ஆங்கிலேயர் காலத்திலிருந்து இப்போது வரையிலும், கொரோனா காலம் தவிர்த்து, இந்தப் பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள், நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பசுமையான சூழலில், சுத்தமான காற்றை சுவாசித்தபடி, காலையிலும், மாலையிலும் 'வாக்கிங்' செல்லும் நோக்கத்தோடு, இப்போதும் இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.இதன் சூழல் முக்கியத்துவம் கருதி, நடைபாதையில் இருந்து, குறிப்பிட்ட துாரத்துக்கு வணிகக் கட்டடங்களை அனுமதிக்கக்கூடாது என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே கோரிக்கை எழுந்தது. அதற்காக, மாநகராட்சியில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. ஆனால் பணத்தால் அது முறியடிக்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் ரேஸ்கோர்ஸ் முழுக்க முழுக்க வணிகப்பகுதியாக மாறிவிட்டது.நடைபாதை மற்றும் சாலைக்கு வெளிவட்டம் முழுவதும் வணிகக் கட்டடங்களாக மாறிவிட்டன. நடைப்பயிற்சி, ஓய்வு, மதிய உணவு, சந்திப்பு என பல காரணங்களுக்காக, இங்கு பல ஆயிரம் மக்கள் வருவதை உணர்ந்து, இப்பகுதியில் எக்கச்சக்கமான உணவகங்கள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் அழகு நிலையங்கள் பெருகி விட்டன.இவற்றைத் தவிர்த்து, இங்கு வரும் மக்களின் பர்ஸ்களைக் காலி செய்வதற்கு, தள்ளுவண்டிகள் மற்றும் தற்காலிகக் கடைகளும் பல மடங்கு அதிகமாகி விட்டன.வார நாட்களில் ஆங்காங்கே நடைபாதையை வழிமறிக்கும் இந்தக் கடைகள், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பெரும் ஆக்கிரமிப்பாக மாறி, ரோட்டையும், நடைபாதையையும் அப்பட்டமாக மறிக்கின்றன.ஆரோக்கியத்துக்காக ரேஸ்கோர்ஸ் வரும் மக்கள் கூட்டத்தை விட, டீ குடிக்கவும், சாட் அயிட்டங்களை அள்ளி நொறுக்கவும், அரட்டை அடிக்கவும் வரும் கூட்டம் அதிகமாகி விட்டது. இவர்கள், வாகனங்களையும் தாறுமாறாக நிறுத்தி வைத்து விடுவதால், குறுகலான ரேஸ்கோர்ஸ் ரோட்டில் வாகனங்கள் இயக்குவதும், நடந்து கடப்பதும் பெரும் சவாலாக மாறியுள்ளது.மாநகராட்சியும் தன் பங்கிற்கு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், இந்தப்பகுதியிலுள்ள பல மரங்களை அகற்றி, ரூ.45 கோடிக்கு பலவிதமான மேம்பாட்டுப்பணிகளைச் செய்து, இந்த பகுதியை வணிகமயமாக்க உதவியுள்ளது. இவற்றைத் தவிர்த்து, இந்தப் பகுதியில் விளம்பரப் பலகைகள் வைப்பதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் பல மடங்கு அதிகமாகியுள்ளது.
போலீசில் புகார்
ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அனுமதியற்ற விளம்பரப் பலகைகள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் பெருகியுள்ளது குறித்து, நீளமான பட்டியலுடன் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில், போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போஸ்டர்கள், விளம்பரப் பலகைகள், ரோட்டோர ஆக்கிரமிப்புகளையும் அகற்றவும் இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இத்தகைய தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை விட, இப்பகுதியின் தனித்துவத்தைக் காக்கும் வகையில், நிரந்தரமான சில நடவடிக்கைகளை அரசு எடுப்பது அவசியம். மிக முக்கியமாக, இனிமேல் இங்கு வணிகக் கட்டடங்களை அனுமதிக்காத வகையில் சிறப்பு அந்தஸ்துள்ள பகுதியாக இதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்அதை அரசு செய்யும் வரையிலும், பந்தயச்சாலை பலருக்கும் பணம் காய்க்கும் சோலையாகவே இருக்கும்!