உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

விளையாட்டு அமைச்சரே கவனியுங்க!

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் 'வாக்கிங்' சென்ற போது, உடற்கல்வி ஆசிரியர்களும் சென்றனர். விளையாட்டு போட்டி நடத்துவதில் இருக்கும் சிக்கலை விளையாட்டுத்துறை அமைச்சர் தான் தீர்த்து வைக்கணும்னு பேசிக்கிட்டாங்க. என்ன விஷயம்னு கவனித்தேன்.மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், வரும் செப்டம்பர் மாதம் துவங்குது. இந்த போட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர், மாற்றுத்திறனாளி, பொதுமக்கள் ஆகிய பிரிவுகளில் நடத்தப்படுகிறது. பள்ளி அளவிலான போட்டி, 13 முதல் 19 வயது வரை நடக்கும்னு அறிவிச்சிருக்காங்க.மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விதிப்படி, பள்ளி அளவிலான போட்டியானது தனித்தனி வயது பிரிவின் கீழ் நடத்தணும்.ஆனா, 13 முதல் 19 வயது வரையிலான மாணவர்களிடையே போட்டி நடத்தினால், ஜூனியர் மாணவர்கள் சீனியர் மாணவர்களை எப்படி எதிர்கொள்வார்கள். ஜூனியர்கள் வெற்றி பெற முடியுமா, இது ஏற்புடையது அல்ல.இங்க இருக்கற அதிகாரிக யாரும், மேலிடத்துல பேச மாட்டீங்கறாங்க. இந்த பிரச்னையை விளையாட்டு துறை அமைச்சர் தான் தீர்த்து வைக்கணும்னு பேசிக்கிட்டாங்க.

பி.ஏ.பி., கூட்டத்தில் கலகல பேச்சு

பொள்ளாச்சி பி.ஏ.பி., ஆபீஸ்ல, திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு ஆலோசனை கூட்டம் சமீபத்துல நடந்தது. அதில், திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசித்தாங்க.நீர் வரத்து, நீர் இருப்பு என அதிகாரிகள், விவசாயிகள் ஆராய்ந்து, எத்தனை சுற்றுகள் கொடுக்கலாம்னு முடிவு பண்ணினாங்க. வரும், 19ம் தேதி தண்ணீர் திறக்க நாள் நல்லா இருக்கானுசீரியஸாக பேசிக்கிட்டு இருந்தாங்க.இதை கண்ட தலைமை பொறியாளர் முருகேசன், '19ம் தேதி நாள் நல்லா இருக்குங்க; ஜோசியம் பார்த்தாச்சு; அந்த நாளே நல்லா இருக்குங்க,' என கலகலப்பாக பேசினார். கூட்டத்தில் சீரியஸாக டிஸ்கஸ் செய்த விவசாயிகளும், அதிகாரியின் பேச்சை கேட்டு குபீரென சிரித்தனர்.'எங்களுக்கு ஓகேங்க' என, சொன்ன விவசாயிகள், அரசாங்கத்துக்கு அறிக்கை அனுப்பி, விவசாயிகள் கேட்பது போல, தண்ணீர் திறப்புக்கு அனுமதி வாங்கி கொடுங்க. அப்பத்தான் பாசனமும் நல்லா இருக்குமுங்க, என, கூற, சீரியஸ் கூட்டம் சிரிப்பலையானது.

ஆஸ்பத்திரி லைசென்ஸ் புதுப்பிக்கல!

கிணத்துக்கடவில் உள்ள கோவிலுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு நண்பர் வர தாமதமானதால், கோவில் வளாகத்தில் அமர்ந்தேன். அங்கு ரெண்டு பேர், தனியார் ஆஸ்பத்திரி பத்தி ஏதோ பேசிகிட்டு இருந்தாங்க. என்னனு அவங்க கிட்ட கேட்டேன்.கிணத்துக்கடவுல இருக்கும் ஒரு தனியார் ஆஸ்பத்திரி முறையா உரிமத்தை புதுப்பிக்காம செயல்படுது. மூனு வருசத்துக்கு ஒரு தடவ சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, பில்டிங் உறுதி சான்று பெற்று, தாசில்தாரிடம் விண்ணப்பிச்சு 'படிவம் டி'லைசென்ஸ் புதுப்பிக்கணும். ஆனா, அந்த ஆஸ்பத்திரி முறையான லைசென்ஸ் இல்லாம இயங்குது.இதே மாதிரி, கிணத்துக்கடவுல பலகட்டடங்கள் அனுமதியில்லாமலும், அனுமதிக்கு மாறாகவும் கட்டியிருக்காங்க. எல்லோருக்கும் மேலிடத்துல செல்வாக்கு இருக்குதாம். அதனால, விதிமீறலுக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளும் தயங்கறாங்க.இப்படியே எல்லோரும், மேலிடத்து பேர சொல்லி கட்டடம் கட்டுறாங்க. எந்த செல்வாக்கும் இல்லாத ஏழை மக்கள் தான், ஒவ்வொரு ஆபீசுக்காக அலைந்து, கேட்கற லஞ்சத்தை கொடுத்து, அனுமதி வாங்க வேண்டியிருக்குனு, சொன்னாங்க.

அக்காமலைக்கு அத்துமீறி போறாங்க

வனத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது, வனத்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கறதில்லைப்பா என, வால்பாறை பஸ் ஸ்டாண்டில் இரு இளைஞர்கள் பேசிக்கொண்டனர்.வால்பாறையின் இயற்கை வளங்களையும், அரிய வகை வன விலங்குகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.குறிப்பாக, ஆனைமலை புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்ட பின்னர், வால்பாறையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.வால்பாறை அடுத்துள்ள அக்காமலை கிராஸ் ஹில்ஸ் பகுதிக்கு, சுற்றுலாபயணியர் செல்ல வனத்துறையினர் கடந்த பல ஆண்டுகளாக தடை விதித்துள்ளனர்.ஆனால் சமீப காலமாக தடை செய்யப்பட்ட பகுதிக்கு, சுற்றுலாபயணியரும், வசதி படைத்தவர்கள், வி.ஐ.பி.,க்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். இப்படியே போனா அக்காமலை கிராஸ்ஹில்ஸ்ல புல் கூட முளைக்காது.சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரியும் விதிமுறை மீறலை கண்டு கொள்ளாததால், கிராஸ் ஹில்ஸ் தற்போது டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறி வருகிறது என வேதனையுடன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அரசு ஒதுக்குது நிதி; மூச்சு விடாம நடக்குது சதி!

உடுமலை அருகே நடந்த 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் சென்ற போது, அந்த பகுதியை சேர்ந்த ஊராட்சித்தலைவர்கள் சோகமாக சுற்றிக்கொண்டிருந்தனர். என்ன தலைவரே நம்மூர்ல முகாம் நடக்குது உற்சாகமாக இருப்பீங்கன்னு பார்த்தா, முகமே டல்லா இருக்கே என அவரது ஆதரவாளர் கேட்டார். அதற்கு ஒரு ஊராட்சி தலைவர், அட போப்பா... இந்த முகாம் நம்மூருல ஏன் நடத்தறாங்கன்னு நினைக்கற அளவுக்கு விஷயம் எல்லாம் நடக்குது;'ஒரு மாவட்டத்துக்கு, ஒரு நாளைக்கு, 5 முகாம் நடத்த, 7 கம்ப்யூட்டர், 5 பிரிண்டர் வாடகைக்கு எடுத்துக்கொள்ள, 98 லட்சத்து, 67 ஆயிரத்து, 160 ரூபாய் மாநில பொது நிதியிலிருந்து செலவு மேற்கொள்ள ஆர்டர் போட்டிருக்காங்க; ஏற்பாடு செலவினங்களுக்காக, ஊரக வளர்ச்சித்துறைக்கு, ரூ.6.25 லட்சம், விளம்பரத்துக்கு செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு ரூ. 1.25 லட்சம் என ஒரு மாவட்டத்திற்கு, ஒரு கோடி ரூபாய் வரை செலவு மேற்கொள்ளலாம் என உத்தரவு போட்டிருக்காங்க.ஆனால், மாவட்ட அதிகாரிங்க, இதபத்தி மூச்சே விடறது இல்லை; முகாம் நடத்தற எல்லா செலவையும், ஊராட்சி நிர்வாகம் தலையில கட்டிட்டு போயிறாங்க. முதல்வர் பேர சொல்லி நல்லா சுருட்டுறாங்க. கட்சிக்காரங்க வேற வந்து சீன் போட்டுட்டு போறாங்க. சரி மினிஸ்டருங்க வர்றாங்க நான் போய் பார்க்கிறேன் என்றபடி அங்கிருந்து கிளம்பினார்.

சும்மா சும்மா வரச்சொல்லாதீங்க...

தமிழக அளவுல அரசு பள்ளிகள்ல இப்ப பரபரப்பான செய்தியா இருக்கிறது பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்புதான். சரி அப்படி எதுக்காக இந்த குழுவுக்கு இவ்வளோ முக்கியத்துவம்னு தெரிஞ்சுக்க குடிமங்கலம் வட்டாரத்துல ஒரு பள்ளிக்கு போனோம்.அங்க இருந்த ஆசிரியர்கள் கிட்ட பள்ளி மேலாண்மை குழுனா என்னன்னு மட்டும்தான் கேட்டோம். 'அத ஏன்பா கேக்குறீங்க வழக்கமா பள்ளி மேலாண்மை குழுவுல பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் குறித்து விளக்கம் சொல்ல ஒரு கூட்டம் நடத்துவோம்.இது ஒவ்வொரு மாசமும் நடப்பதுதான். ஆனா இதுக்கே பெற்றோர் கிட்ட ஆசிரியர்கள் கெஞ்சாத குறையாக வரசொல்லி கேக்கணும். அப்பவும், மூன்றுல ஒரு பங்கு பெற்றோர்தான் வருவாங்க. இப்ப பள்ளிமேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வேற துவங்கிடுச்சா. அதுக்கு பெற்றோர அழைக்கறதே பெரும்பாடா இருக்கு.மாசத்துல ஒரு முறைதான கூட்டம் நடத்துவீங்க, இப்ப என்ன சும்மா சும்மா கூப்பிடுறீங்கனு எங்கள திட்டாத குறை; இத சொன்னா கல்வித்துறை ஏத்துக்காது. மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி மாறி ஆகிடுச்சு எங்க நிலை,' என புலம்பி தள்ளினர். எதுவும் கேட்காமல் இருந்திருக்கலாம் என 'மைன்ட் வாய்ஸ்' போட்டுவிட்டு இடத்தை காலிசெய்தோம்.

இதுதாங்க ரியல் 'கஸ்டமர் கேர்'

கஸ்டமர்களை பாதுகாக்கறதுல, டாஸ்மாக்காரங்களை அடிச்சுக்க ஆளே இல்லை என உடுமலை அண்ணா பூங்காவில், 'குடி'மகன்கள் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதாவது: ஏன்பா, 'டாஸ்மாக்'காரங்க, கஸ்டமர்கள்கிட்ட, பாட்டில் விலையை விட கூடுதலாக வைச்சு விற்பனை செய்யறாங்க. அவங்கள போய் கஸ்டமர்கள் பாதுகாக்கறத சொல்ற என்றார். அதற்கு மற்றொரு நபர் விஷயம் அதுவல்ல... அண்ணா பூங்காவுல நாள்தோறும் குடிச்சுட்டு டார்ச்சர் பண்றாங்க.ராஜேந்திரா ரோட்டுல யாரும் நடமாட முடியல அப்படின்னு, உடுமலை போலீசுல புகார் கொடுத்தாங்க. உடனடியாக பூங்காகிட்ட போலீஸ்காரங்க பாதுகாப்புக்கு போனாங்க. ஆனா அன்னைக்கு ஒருத்தர் கூட பூங்காவுக்கு குடிக்க வரல.இதெப்படின்னு, பெட்டிஷன் கொடுத்தவங்க யோசிட்டு இருந்தாங்க. விசாரிச்சா, போலீஸ்ல பெட்டிஷன் கொடுத்ததும், பூங்கா பக்கத்துல இருக்கற டாஸ்மாக் கடைக்கு தகவல் போயிருச்சு. அங்க இருந்த ஊழியருங்க, சரக்கு கொடுக்கும் போதே, பூங்கா பக்கம் யாரும் போகாதீங்க; போலீஸ் நிக்கும் அப்படின்னு சொல்லியிருக்காங்க.இதனால, யாரும் அன்னைக்கு அந்த பக்கம் போகமாக, போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சுட்டாங்க. இப்ப சொல்லுங்க, இதுதானே 'ரியல் கஸ்டமர் கேர்', இப்படி இருந்தா, மக்கள் எத்தனை புகார் கொடுத்தாலும், யாரையும் எதுவும் செய்ய முடியாது என அங்கிருந்து மீண்டும் டாஸ்மாக் மதுக்கடையை நோக்கி செல்லத்துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி