சர்வீஸ் ரோட்டில் பஸ் இயக்க கோரிக்கை
கிணத்துக்கடவு;பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், சர்வீஸ் ரோட்டில் பஸ் இயக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கோவையில் இருந்து, கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களுக்கு, பஸ் இயக்கப்படுகின்றன. இதில், ஏராளமான பஸ்கள், சர்வீஸ் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று பயணியரை ஏற்றி, இறக்கி செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே பஸ்சை நிறுத்தி இயக்குகின்றனர்.இதனால், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதுடன், விபத்துக்கு வழிவகுக்கிறது. மேலும், கிணத்துக்கடவு பகுதியில் பஸ் நிற்காமல் மேம்பாலத்தின் மீது செல்வதால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இதை கவனித்து சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாண்டில் காலை மற்றும் மாலை நேரத்தில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த இங்கு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.