கோவை;கோவை- சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலின் பயணிகள் பயன்பாடு அதிகமாக உள்ளதால், நிரந்தர சேவையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கும்பகோணம் மேம்பாட்டு மன்றம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளின் மூலம், கடந்த ஏப்., 18 முதல் ஏப்., 21ம் தேதி வரை சென்னை எழும்பூர் - கோவை இடையே இருவழிகளிலும், ரயிலின் பயணிகள் பயன்பாடு 130 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.எழும்பூர் - கோவை சிறப்பு ரயிலில் (எண்: 06003) பயணிகளின் பயன்பாடு 132.5 சதவீதமாக இருந்தது. கோவை- எழும்பூர் சிறப்பு ரயிலில் (எண்: 06004) 129.90 சதவீதமாக இருந்தது. முறையே ரூ.8.77 லட்சம் மற்றும் ரூ.8.76 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த ரயில் சேவையை நிரந்தரமாக்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.'கோவை, திருச்சி, சென்னை பகுதி பயணிகளுக்கு இந்த ரயில் சேவை உதவிகரமாக உள்ளது. எழும்பூர், தாம்பரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, கோவை பகுதிகளை இணைப்பதன் வாயிலாக, ஆன்மிக மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு இந்த ரயில் உதவியாக இருக்கும். சுவாமி மலை மற்றும் பழநி ஆகிய இரு முக்கிய ஆன்மிகத் தலங்களை இணைக்கும், இந்த ரயில் சேவையைச் சீரமைத்து, நிரந்தரமான ரயில் சேவையாக மாற்ற வேண்டும்' என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.