விலை உயர்வை எதிர்பார்த்து கொப்பரை இருப்பு வைப்பு
நெகமம்:கொப்பரை விலை உயர்வை எதிர்பார்த்து, நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் கொப்பரையை இருப்பு வைத்துள்ளனர்.நெகமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு தென்னை விவசாயம் உள்ளது. இங்கு உள்ள விவசாயிகள் பலர், தங்கள் விளைபொருட்களை நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக விற்பனை செய்து வருகின்றனர்.கொப்பரை விலை குறைவாக இருப்பதால் விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து விலை அதிகரிக்கும் போது விற்பனை செய்கின்றனர்.தற்போது, ஒரு கிலோ கொப்பரை விலை 102 முதல் 104 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதில், 35 விவசாயிகள், விற்பனை கூடத்தில் தற்போது, 50 கிலோ எடை கொண்ட, 4,708 மூடைகளை இருப்பு வைத்துள்ளனர்.கொப்பரை விலை அதிகமாகும் போது, விவசாயிகள் இருப்பு வைத்துள்ள கொப்பரையை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.