| ADDED : ஜூலை 11, 2024 11:50 PM
கோவை : கோவை வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டியில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆண்டு தோறும் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டுகின்றன. அதன்படி, இந்தாண்டுக்கான குறுமைய அளவிலான போட்டிகள் விரைவில் நடக்கவுள்ளன.குறுமைய அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு, பள்ளி அளவில் நேற்று செஸ் போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டது.கோவை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட, 2000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நேற்று செஸ் போட்டி நடத்தப்பட்டது. மருதமலை தேவஸ்தான பள்ளியில் நடந்த போட்டியை கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார்.இதில், மாணவ - மாணவியருக்கு 11, 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடித்த மாணவர் ஒருவர், மாணவியர் ஒருவர் குறுமைய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.