உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; உஷாராகும் உள்ளூர் புகார் கமிட்டிகள்

மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; உஷாராகும் உள்ளூர் புகார் கமிட்டிகள்

கோவை : தலைமை செயலர் அறிவுறுத்தலை தொடர்ந்து கல்லுாரிகளில், உள்ளூர் புகார் கமிட்டிகளின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கல்வி நிறுவனங்களில் பாலியல் ரீதியாக பெண்கள், மாணவியர் துன்புறுத்தப்படுவதை தடுக்க தலைமை செயலாளர் முருகானந்தம் கடந்த, 2ம் தேதி வீடியோ கான்பரன்சிங் கூட்டம் நடத்தினார்.கூட்டத்தில், அனைத்து கல்லுாரிகளிலும், உள்ளூர் புகார் குழு(ஐ.சி.சி., கமிட்டி) இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; அதில் தெரிவிக்கப்படும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் அறிக்கை தயார் செய்து, கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து அனைத்து கல்லுாரிகளிலும், உள்ளூர் புகார் கமிட்டியின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுடன் கலந்துரையாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.போலீசார் சார்பில் 'போலீஸ் அக்கா' திட்டம் குறித்த விழிப்புணர்வு பேனர்கள், கல்லுாரி வளாகங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பிரச்னைக்கு முக்கியத்துவம்'

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் மனோன்மணி கூறுகையில்,''எங்கள் கல்லுாரியில் உள்ளூர் புகார் குழுவின் உறுப்பினர்கள் குறித்து, மாணவர்கள் அறியும் விதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போலீசாரும் போலீஸ் அக்கா குறித்த பேனர்களை வைத்துள்ளனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை தீர்க்க உள்ளூர் புகார் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ