மேம்பாலத்தில் சீரமைப்பு பணியை துரிதப்படுத்துங்க; வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தில், சேதமடைந்த இரும்பு சட்டங்கள் அகற்றி மாற்றியமைக்கப்படுவதால், கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன.கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய ரோடான, பொள்ளாச்சி - --- பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, பொள்ளாச்சி--- போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது. ரயில்வே கேட்டை கடப்பதற்கு, நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மேம்பாலத்தில் இரும்பு சட்டங்கள் பெயர்ந்துள்ளன. இதேபோல, இரும்பு சட்டங்கள் பெய்ந்த இடத்தில், பெரும் பள்ளம் ஏற்பட்டதால், வேகமாக செல்லும் வாகனங்கள், விபத்தில் சிக்கின.இதனால், தற்போது, சேதமடைந்த இரும்பு சட்டங்களை மாற்றியமைக்க, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, மேம்பாலத்தில் பொள்ளாச்சி நோக்கிய வழித்தடத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது, நல்லுார் - ஜமீன் ஊத்துக்குளி பிரிவு அருகிலேயே வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன.குறிப்பாக, பொள்ளாச்சி நோக்கிய வழித்தடத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.இதேபோல, மேம்பாலம் முதல் நல்லுார் பிரிவு வரையிலான சாலையில் நடுவே, சென்டர்மீடியனைக் கடந்து வாகனங்கள் செல்வதை தடுக்க, பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது.வாகனங்கள் அத்துமீறி செல்லாமல் இருக்க, அறிவிப்பு பலகையுடன் போக்குவரத்து போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'கடந்த ஒரு வாரமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.பிரதான வழித்தடம் என்பதால், போக்குவரத்து முக்கியத்துவம் கருதி, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்,' என்றனர்.