உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம்! தமிழக அரசுக்கு தொழில்துறையினர் எச்சரிக்கை

மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம்! தமிழக அரசுக்கு தொழில்துறையினர் எச்சரிக்கை

கோவை : 'தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினர் தொழில் செய்ய இயலாத நிலை தொடர்கிறது' என, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறியதாவது:கடந்த, 2022ல் அறிவித்த மின் கட்டண உயர்வு தொடர்பாக, அன்றைய மின்துறை அமைச்சர், அதிகாரிகளிடம் பேசி பயனில்லாததால், திருப்பூர் ஜவுளி சங்கங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள இன்ஜினியரிங் மற்றும் அனைத்து தொழில் அமைப்புகள் இணைந்து, எட்டு கட்ட போராட்டம் நடத்தினோம். அப்போது, 'பீக் ஹவர்' கட்டணம், 'சோலார் நெட் ஒர்க்' கட்டணம், 'டேரிப்' மாற்றம் செய்யப்பட்டது. முக்கிய கோரிக்கையான, 433 சதவீதம் உயர்த்திய 'டிமாண்ட் சார்ஜ்' திரும்ப பெறப்படவில்லை.

ரூ.17,136 கட்டாயம்

இதன் காரணமாக, கம்பெனியை இயக்கினாலும் இயக்காவிட்டாலும், 17 ஆயிரத்து 136 ரூபாய் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்கிற நிலை தொடர்கிறது.லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால், அரசு தரப்பில் நல்ல அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், 4.86 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருப்பது, மீள இயலாத நிலைக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை தள்ளியுள்ளன. 2022 முதல் மூன்று முறை உயர்த்தப்பட்ட நிலைகட்டணம், யூனிட் கட்டணம், சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு விதிக்கப்படும் யூனிட் கட்டணம் ஆகியவற்றை, ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், தொழில்நிறுவனங்களை விட்டு விட்டு, தொழில்துறையினர் ரோட்டில் இறங்கி போராடும் நிலை ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை