மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கேரள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகளின் வலசை பாதையாகவும் இந்த வனப்பகுதிகள் உள்ளன.இந்த வனப்பகுதிகளில், நேற்று யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. மேட்டுப்பாளையத்தில், மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியக உதவி வன பாதுகாவலர்கள், 5 குழுக்களாக பிரிந்து ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானையின் நடமாட்டம் குறித்து நேர்கோட்டில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதேபோல், சிறுமுகையில் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையில், 6 குழுக்களாக பிரிந்து ஓடந்துறை, கூத்தாமண்டி வடக்கு, தெற்கு, பெத்திக்குட்டை, குஞ்சப்பனை, உலியூர் ஆகிய பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். காரமடையில், காரமடை வனச்சரகர் ரஞ்சித் தலைமையில் 3 குழுக்களாக பிரிந்து, மானார் பிரிவு, வீரக்கல், குண்டூர், அத்தி கடவு, கொரவன்கண்டி ஆகிய பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று, யானைகளின் சாணம், சிறுநீர் அதன் கால் தடங்கள் ஆகியவற்றை வைத்து யானைகள் கணக்கெடுக்கும் பணியும், நாளை நீர்நிலைகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.---