வீரர்களுக்கு ஒதுக்கப்படும் தொகை விளையாட்டில் கிடைக்கும் வாகை!
''தமிழக அரசு, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வரும் பரிசு மற்றும் உதவித்தொகைகளை பயன்படுத்தி, விளையாட்டில் சிறக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, கோவை மண்டல முதுநிலை மேலாளர் அருணா கூறினார். அவர் கூறியதாவது:வெற்றியாளர் மேம்பாட்டு திட்டத்தின் (champions development scheme) கீழ், தேசிய அளவில் பதக்கம் பெறும் விளையாட்டு வீரர் ஒருவருக்கு, ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 2 லட்சத்திலிருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.எம்.ஐ.எம்.எஸ்., (மிஷன் இன்டர்நேஷனல் மெடல் ஸ்கீம்) திட்டத்தின் கீழ், சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும், திறன் கொண்ட ஒரு வீரருக்கு, ஆண்டுக்கு வழங்கப்பட்டு வந்த 10 லட்சம் ரூபாய் நிதியுதவி, 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.ஆசிய அளவில் பதக்கம் பெறும் வீரருக்கு, ஆண்டுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.20 லட்சம் நிதியுதவி, ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியிலும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கும் இதுபோன்ற வாய்ப்புகளை, மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொண்டு விளையாட்டுத்துறையில் சிறக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.