பட்டணம் ரோடு படுமோசம் அடிக்கடி நிறுத்தப்படுகிறது பஸ்
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் - பட்டணம் ரோட்டை சீரமைக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சியில், பட்டணம் பகுதியில் முறையான ரோடு வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் மாசநாயகன்புதூர் வழியாக சென்று வருகின்றனர். இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோவை, டவுன்ஹாலில் இருந்து கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம், பட்டணம் வழியாக சேரிபாளையம் வரை, '33இ' அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. ரோடு சேதம் காரணமாக இந்த பஸ் கடந்த சில நாட்களாக இயங்காமல், தற்போது மீண்டும் இயங்கப்படுகிறது.ரோடு சீரமைக்காததால், இந்த பஸ் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என்ற வேதனையில் மக்கள் பலர் உள்ளனர்.மக்கள் கூறியதாவது:பட்டணம் பகுதி ரோடு சேதமடைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. தார் ரோடாக இருந்தது, இப்போது மண் ரோடாக மாறியுள்ளது. இவ்வழியில் பைக்கில் சென்றார் தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது.மழை காலங்களில் ரோடு முழுவதும் சேறும், சகதியுமாக இருப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால், பெரும்பாலானோர் இவ்வழியாக பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர்.இந்த ரோட்டை சீரமைக்க கோரி பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. இதனால், பஸ் இயக்கம் அவ்வப்போது தடைபடுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி ரோட்டை விரைவில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.