சிறுத்தையை பிடிக்க கூண்டு வச்சாச்சு!
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல், கெம்பனூர் பகுதியில், பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.கடந்த சில நாட்களாக, அட்டுக்கல் மற்றும் கெம்பனூர் பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த, 8ம் தேதி அதிகாலை, அட்டுக்கல் செல்லும் வழியில் உள்ள விவேகானந்தன் என்பவரின் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடர் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறையினர் கேமராக்கள் பொருத்தினர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, முதன்மை தலைமை வனப்பாதுகாவலரின் அனுமதி கிடைத்தது. இதையடுத்து, கெம்பனூர் பிரிவில் இருந்து அட்டுக்கல் செல்லும் வழியில் உள்ள பெரும்பள்ளத்தில், வனத்துறையினர் நேற்றுமுன்தினம் இரவு, கூண்டு வைத்துள்ளனர். கூண்டில், சிறுத்தைக்கு உணவாக இறைச்சித்துண்டுகளை வைத்துள்ளனர். இப்பகுதியில், பல இடங்களிலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், கூடுதலாக மற்றொரு இடத்திலும் கூண்டு வைக்க, வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.