உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து வரி வசூலித்து சாதித்தது மாநகராட்சி ரூ.80 கோடி மானியம் ஒதுக்கியது மத்திய அரசு

சொத்து வரி வசூலித்து சாதித்தது மாநகராட்சி ரூ.80 கோடி மானியம் ஒதுக்கியது மத்திய அரசு

கோவை;கோவை மாநகராட்சி சொத்து வரி அதிகமாக வசூலித்ததை தொடர்ந்து, வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு மானியமாக, ரூ.80 கோடியை, மத்திய அரசு ஒதுக்கியது.கோவை மாநகராட்சிக்கு சொத்து வரியே பிரதான வருவாய்; ஆறு மாதத்துக்கு ஒருமுறை என ஆண்டுக்கு இரு முறை வசூலிக்கிறது. 2023-24 நிதியாண்டில், ரூ.409.42 கோடி, 2022-23 நிதியாண்டு நிலுவை ரூ.118.58 என, மொத்தம் ரூ.528 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வார்டுக்கு ஒருவர் வீதம் வரி வசூலர்கள் நியமிக்கப்பட்டு, சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டது. நிதியாண்டு நிறைவில், ரூ.370.32 கோடி, நிலுவை கணக்கில் ரூ.45.71 கோடி என, 416.03 கோடி வசூலிக்கப்பட்டது. 2023-24 நிதியாண்டில் மட்டும், 90.45 சதவீதம் வசூலித்து, கோவை மாநகராட்சி சாதனை படைத்தது. இதுதவிர, காலியிட வரி ரூ.36.57 கோடி, தொழில் வரி ரூ.55.32 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.53.13 கோடி, ஏலம் மற்றும் குத்தகை இனங்களாக ரூ.21.34 கோடி, ரூ.25.39 கோடி உட்பட பல்வேறு இனங்கள் வாயிலாக மொத்தம் ரூ.607.90 கோடி ரூபாய் மாநகராட்சி நிர்வாகத்தால் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.உள்ளாட்சி அமைப்புகளின் வரி வருவாய்க்கேற்ப, வளர்ச்சி பணிகள் செயல்படுத்த, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் மானியத்தொகை வழங்குவது வழக்கம். அவ்வகையில், கோவை மாநகராட்சிக்கு, 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.''இப்படி தான்!மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப, சொத்து வரி வசூல் அதிகரிக்க வேண்டும். இதற்கென ஒரு, 'பார்முலா' பின்பற்றப்படுகிறது. அவ்வாறு சொத்து வரி அதிகரிக்கும் பட்சத்தில், கோவை மாநகராட்சிக்கு, 80 கோடி ரூபாய் மானியத்தொகை விடுவிக்கப்படும். கடந்த நிதியாண்டில், சொத்து வரி வசூல் அதிகமாக ஈட்டியதால், மானியத்தொகை கிடைக்கிறது. அதற்கான திட்டங்களை அரசுக்கு சமர்ப்பித்தால், அந்நிதி விடுவிக்கப்படும்.-- சிவகுரு பிரபாகரன்,மாநகராட்சி கமிஷனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ