| ADDED : ஜூன் 24, 2024 12:55 AM
கோவை:ஒரு வாரத்துக்கும் மேலாக மாநகராட்சி இணையதளம் முடங்கி கிடப்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்த, இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதுதவிர, மாநகராட்சி அதிகாரிகள், சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி இணையதளம் வாயிலாக மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதிகாரிகளை தொடர்பு கொள்ள, அவர்களது மொபைல் எண்களும் வழங்கப்பட்டுள்ளன. இணையதளம் வாயிலாக, புகார்களையும் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, இணையதளம் செயல்படவில்லை. இதனால், பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி சேவைகளை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, வரி செலுத்த முடியாமல், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரி செலுத்த மாநகராட்சி வரிவசூல் மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்களையும் பெற முடிவதில்லை. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இணையதளம் மீண்டும் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் கூறுகையில், ''இணையதளம் மேம்பாடு, பராமரிப்பு பணிகளுக்காக செயல்படாமல் உள்ளது. விரைவில் செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.