| ADDED : ஜூலை 25, 2024 12:09 AM
கோவை, : கோவை மாநகராட்சியில், நாளை (26ம் தேதி) மாமன்ற கூட்டம் நடக்கிறது. இதையொட்டி, ஆளுங்கட்சியான தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர்கள் முருகேசன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேர்தல் சமயத்தில் முன்அனுமதி வழங்கி செய்யப்பட்ட பணிகளுக்கு பின்னேற்பு தீர்மானம், வளர்ச்சி பணிகளுக்காக முன்வைக்கப்படும் தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், 40 தொகுதி களிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில், தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்தது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், துணை மேயர் வெற்றிச்செல்வன், நிலைக்குழு தலைவர்கள் மாரிச்செல்வன், சந்தோஷ், சாந்தி, முபஷீரா, மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி, ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.