வடவள்ளி : மருதமலை அடிவாரத்தில், அதிகாலையில், காட்டு யானைகள் மாட்டுக்கொட்டகைக்குள் புகுந்து, கொட்டகையை சேதப்படுத்தி, புண்ணாக்கு, தவிடு போன்றவற்றை உண்டன.கோவை வனச்சரகத்திற்குட்பட்ட, மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள மருதமலை அடிவாரம், அதனைச்சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து வருகிறது. அவ்வாறு வரும் யானைகள், வீடுகள், கடைகளை உடைத்து சேதப்படுத்தி, அரிசி, பருப்பு, மாவு உள்ளிட்ட உணவு பொருட்களை உண்டு செல்கிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை, மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 2 பெண் யானைகள், 3 ஆண் யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம், மருதமலை அடிவாரம், அன்னை இந்திரா நகரில் உள்ள, மாட்டுக்கொட்டகையை உடைத்து சேதப்படுத்தி உள்ளே சென்றது.கொட்டகைக்குள் வைக்கப்பட்டிருந்த புண்ணாக்கு, தவிடு போன்ற தீவனங்களை ருசித்து உண்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், காட்டுயானை கூட்டத்தை, மருதமலை வனப்பகுதிக்குள் விரட்டினர். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில், புண்ணாக்கு, தவிடு போன்ற தீவனங்களை வெளியில் வைக்காமல், கட்டடத்திற்குள் வைக்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.