உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர் மாயம்! சூழ்ச்சி நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர் மாயம்! சூழ்ச்சி நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை:''கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன,'' என, பா.ஜ., மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கோவை, ராம் நகரிலுள்ள மாநகராட்சி பள்ளி ஓட்டுச்சாவடியை பார்வையிட்ட பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் பெரிய அளவில் திட்டமிட்டு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அங்கப்பா பள்ளியில் ஒரே ஓட்டுச்சாவடியில், 830 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் மற்றும் அரசு அதிகாரிகள் வேலை செய்தனரா என்று தெரியவில்லை.நியாயமான முறையில் தேர்தல் அறிவிப்புக்கு முன், தேர்தல் கமிஷன் தங்களுடைய வேலையை செய்தனரா என்ற கேள்வி எழுகிறது. இதையெல்லாம் தாண்டி, மக்கள் ஓட்டுகளை செலுத்த ஆர்வமாக இருந்தனர்.கோவையில் கடந்த 40 ஆண்டுகளாக ஓட்டளித்து வருபவருக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதில், தி.மு.க.,வினரின் அரசியல் தலையீடும், சூழ்ச்சியும் இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பலருக்கு, ஓட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது.பல்லடம், சூலுார் என பல இடங்களில், பா.ஜ.,வுக்கு பாரம்பரியமாக ஓட்டு செலுத்த வந்தவர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மறியல், போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.நியாயமான, நேர்மையான முறையில் வாக்காளர் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளருக்கு வழங்க, தேவையான ஆதாரங்களையும், தரவுகளையும் சேகரித்து, மனுவாக அளித்திருக்கிறோம்.ஓட்டுச்சாவடிகளில், 70 சதவீத ஓட்டுகளை நீக்கிவிட்டு ஓட்டுப்பதிவு நடத்துவது எப்படி நியாயமாக இருக்கும்? சம்பந்தப்பட்ட பகுதிகளில் மறு ஓட்டுப்பதிவு கேட்கிறோம். தேர்தல் கமிஷன், வயதானவர்களுக்கு போதிய வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால், போதிய வசதிகளை செய்து தரவில்லை. கோவை லோக்சபா தொகுதியில் 3:00 மணியளவில் 50.5 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. கோவையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இல்லை. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 20 பெயர்கள் இல்லை. உயிரோடு இருப்பவர்களின் ஓட்டுகள் இல்லை. உதாரணத்துக்கு, இறந்த கணவருக்கு ஓட்டு உள்ளது; உயிரோடு இருக்கும் மனைவிக்கு ஓட்டு இல்லை.வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமை, பெயரளவுக்கு நடத்தக்கூடாது. ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பார்க்க வேண்டும். கூடுதல் கவனம் செலுத்தி முகாம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை