| ADDED : ஏப் 26, 2024 12:54 AM
கோவை;பார்சன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாக பதிலளிக்க மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோவை, நஞ்சுண்டாபுரம் ரோடு, பார்சன் குடியிருப்பில், 610 வீடுகள் உள்ளன. இக்குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் 'கார் பார்க்கிங்', 'ஸ்டோர்' அமைக்கப்பட்டுள்ளதால், இடத்தை மீட்டு பூங்கா அமைத்துத்தரக்கோரி அப்பகுதியினர் மாநகராட்சிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.இதையடுத்து, கடந்த, 2019ம் ஆண்டு அங்கு வசிக்கும் பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கனகசுந்தரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இதுதொடர்பாக, ஜூலை 1ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, கனகசுந்தரம் கூறுகையில்,''இங்குள்ள ஓ.எஸ்.ஆர்., இடத்தில் பூங்கா அமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரக்கோரி மாநகராட்சியிடம் கடந்த, 2019ல் மனு அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தேன். தற்போது, அது உயிர்பெற்றுள்ளது. ஓ.எஸ்.ஆர்., இடம் மீட்பு விஷயத்தில் ஜூலை 1க்குள் கட்டாயம் மாநகராட்சி பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐகோர்ட் எச்சரித்துள்ளது. எனவே, பணிகள் வேகமெடுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.