| ADDED : ஜூலை 14, 2024 01:56 AM
பாகல்கோட்,'கர்நாடக மாநிலம், பாகல்கோட்டில் பக்தர்களின் வயிற்றில், கோடாரியால் அடித்த கோவில் அர்ச்சகர், மூட நம்பிக்கை தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.பாகல்கோட் மாவட்டம், முத்தோலின் மெட்டாகுடா என்ற கிராமத்தில் காசி லிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவில் திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவில் பங்கேற்க, பல்வேறு கிராமத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். கை, கால் உட்பட உடலில் வலி உள்ள பக்தர்கள், திருவிழாவின்போது, இக்கோவிலின் அர்ச்சகர் ஜக்கப்பா கடாடாவிடம், கோடாரியால் அடி வாங்கினால் வலி சரியாகிவிடுமென பக்தர்கள் நம்புகின்றனர். அதுபோன்று, இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த திருவிழாவின்போது, வயிற்றுவலியால் அவதிப்பட்ட பக்தர் ஒருவர், அவரிடம் முறையிட்டார். அவரும், பக்தரை கீழே படுக்க வைத்து, கோடாரியால், வயிற்றில் அடித்தார். ரத்தம் வந்தபோது, மஞ்சள் துாளை அள்ளிப் பூசுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக லோகாபுரா போலீசில் புகார் செய்யப்பட்டது. மூட நம்பிக்கை தடைச்சட்டத்தில் அர்ச்சகர் ஜக்கப்பா கடாடா கைது செய்யப்பட்டார்.