பொள்ளாச்சி;தெருநாய்களை கட்டுப்படுத்துவதில், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அவற்றின் பெருக்கம் அதிகரிக்கிறது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், சாலையோர உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் உணவுக்கழிவுகள், தெருநாய்களுக்கு உணவாகிறது.மேலும், இறைச்சிக் கடைக்காரர்கள், சாலையோரம் இறைச்சிக்கழிவுகளை கொட்டிச்செல்வதும், தெருநாய் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.இவற்றை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஆக்கப்பூர்வ நடவடிக்கை இல்லை. இதனால், நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள், அவ்வப்போது, தெருநாய்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.அதேநேரம், தெரு நாய்களிடம் இருந்து, மக்களை காக்க, அவற்றுக்கு கருத்தடை சிசிகிச்சை செய்வதற்கு மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் முனைப்பு காட்டுகின்றன.அவற்றைப்பிடிக்க பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாதிருத்தல், கால்நடை டாக்டர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டமும் கைவிடப்படுகிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது:மருந்து உள்ளிட்ட உபகரணங்கள், நாய் பிடித்து எடுத்து செல்வோருக்கான கூலி உள்ளிட்ட செலவினங்களை ஒப்பிடும் போது, ஒரு நாய்க்கு, 1,750 முதல், 2,000 ரூபாய் செலவிட வேண்டும்.பொது நிதி உள்ளிட்ட ஏதாவது ஒரு வகையில் தொகை ஒதுக்கினாலும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அரசு கால்நடை டாக்டர்கள், தங்களது நேரத்தை ஒதுக்குவது கடினமாகக் கருதுகின்றனர்.எனவே, தனியார் கால்நடை கிளினிக் வைத்துள்ள டாக்டர்கள் வாயிலாக, இப்பணியை மேற்கொள்ள ஏற்பாடு செய்வது அவசியமாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.