| ADDED : ஜூலை 28, 2024 12:42 AM
கோவை;கோவையில் 'தமிழ் மதுரம்' எனும் இலக்கிய அமைப்பு துவக்கவிழா மற்றும் கவிஞர் மகேஸ்வரி சற்குரு எழுதிய நான்கு நுால்களின் வெளியீட்டு விழா, ராம்நகரில் உள்ள கோதண்டராமர் கோவில் அரங்கில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், நுால்களை வெளியிட, பிரிட்டனை சேர்ந்த டாக்டர் வேலு பாண்டியன், விருதுநகர் அம்பாள் குழும தலைவர் முத்துமணி, திருவாரூர் 'ஆன்மிகம் ஆனந்தம்' அமைப்பு தலைவர் கனகராஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.நுால்கள் குறித்து, கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா பேசுகையில், ''தமிழ் இலக்கியங்களை குறிப்பாக கலித்தொகை, திரிகடுகம் இனியவை நாற்பது, கம்பனில் அதிகம் பேசப்படாத எளிய பாடல்கள், பாரதியின் அறியப்படாத எளிய கவிதைகள் போன்றவற்றை, மாணவர்களுக்கும் மற்றவர்க்கும் கொண்டு சேர்ப்பதை, குறிக்கோளாகக் கொண்டு, இந்த தமிழ் மதுரம் இலக்கிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது,'' என்றார். விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம் வாழ்த்துரையும், நுாலாசிரியர் மகேஸ்வரி சற்குரு ஏற்புரையும் வழங்கினர்.