உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு விதமான உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் ;தேர்தல் பிரிவினர் விளக்கம் கேட்டதால் அதிர்ச்சி

இரு விதமான உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் ;தேர்தல் பிரிவினர் விளக்கம் கேட்டதால் அதிர்ச்சி

கோவை;பொள்ளாச்சி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், பொள்ளாச்சியில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்காததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்.கோவை மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சமீபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள், பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் கல்லுாரியில் நடந்த பயிற்சியில் பங்கேற்க, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டு, கடிதம் அனுப்பியிருக்கிறார். இவர்களே, உடுமலையில் நடக்கும் பயிற்சியிலும் பங்கேற்க உத்தரவிட்டு, திருப்பூர் கலெக்டர் கடிதம் அனுப்பியிருக்கிறார். பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள், தங்களின் வசதிக்கேற்ப பங்கேற்றுள்ளனர். உடுமலைக்கு சென்றவர்கள், பொள்ளாச்சியில் நடந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை.இதில், பொள்ளாச்சியில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்காதவர்களுக்கு விளக்கம் கேட்டு, தேர்தல் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். இவர்களிடம் பயிற்சியில் பங்கேற்காததற்கான காரணம் கேட்கப்பட்டது. அதற்கு, 'உடுமலையில் நடந்த பயிற்சியில் பங்கேற்றோம்' என, ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதையே எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள் என அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்துச் சென்றனர்.ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'கோவை மாவட்ட தேர்தல் பிரிவில் இருந்து, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவில் இருந்தும் இரு கடிதங்கள் வந்தன. நாங்கள் உடுமலையில் நடந்த பயிற்சியில் பங்கேற்றோம். பொள்ளாச்சியில் ஏன் பங்கேற்கவில்லை என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். ஒரே நபருக்கு இரு மாவட்ட நிர்வாகங்கள் கடிதம் அனுப்பியது தவறு. அதை சரி செய்யாமல், எங்களை அலைக்கழித்து விளக்கம் கேட்கின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vijay
மார் 29, 2024 12:19

தேர்தல் ஒதுக்கீடு, பயிற்சி பலருக்கு இரண்டுக்கு மேற்பட்ட இடங்களில் பங்கேற்க வருவது பல தேர்தல்களில் நடக்கிறது அதுல காமெடி என்னவென்றால் எரிச்சலாகவும் உள்ளது தவறாக ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு இடங்களுக்கு செல்ல கடிதம் அனுப்புவது யார் தவறு, தேர்தல் அலுவலர்கள், தேர்தல் அலுவலக தவறு ஆனால், அதற்கு ஏன் என்று விளக்கம் நாம் கொடுக்கணுமாம் யாராச்சும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அபரிமிதமான அதிகாரம் தேவைதான் ஆனால் அவர்கள் செய்யும் தறுகளுக்கு நாம் ஏன் பதில், விளக்கம் சொல்லவேண்டும்?


மேலும் செய்திகள்



புதிய வீடியோ