| ADDED : ஏப் 25, 2024 11:28 PM
அன்னுார்;காரேகவுண்டம்பாளையத்தில், 7.50 லட்சம் ரூபாயில் வழங்கப்பட்ட டிராக்டர், 13 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறிய ஊராட்சிகளில், பேட்டரி ஆட்டோக்கள் வழங்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. கஞ்சப்பள்ளி, காரேகவுண்டம் பாளையம் உள்ளிட்ட பெரிய ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள் வழங்கப்பட்டன. காரே கவுண்டம்பாளையம் ஊராட்சி, அன்னுார் ஒன்றியத்திலேயே இரண்டாவது பெரிய ஊராட்சி. அதிக கிராமங்கள், அதிக மக்கள் தொகை கொண்டது, இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு குப்பை சேகரிக்க பேட்டரி ஆட்டோ மட்டும் போதுமானதாக இல்லை. டிராக்டர் வேண்டும் என பல ஆண்டுகளாக வற்புறுத்தியதன் விளைவாக கடந்த ஆண்டு கோவை மாவட்ட நிர்வாகம் குப்பை எடுத்து திடக்கழிவு மேலாண்மை கிடங்குக்கு கொண்டு செல்ல டிராக்டர் வழங்கியது. ஆனால், டிராக்டருடன் குப்பைகளை ஏற்றி செல்லும் டிரெய்லர் இதுவரை வழங்கவில்லை.இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் கூறுகையில், ''டிரெய்லர் வழங்க கோரி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை நினைவூட்டியும் நடவடிக்கை இல்லை. உடனடியாக டிரெய்லர் வழங்கி, தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும், பயன்பாடு இல்லாமல் 13 மாதங்களாக முடங்கிக் கிடக்கும் டிராக்டரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.