பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, தொழிலாளியை கொலை செய்த, இருவரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே எஸ். சந்திராபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன்,45. இவர், அதே பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ்,27, அருண்ராஜ்,26 ஆகியோருடன் கடந்த, 13ம் தேதி எஸ். சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மது அருந்தினர். மதுபோதையில் தகராறு ஏற்பட்ட நிலையில், சூர்யபிரகாஷ், அருண்ராஜ் இருவரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் கோபத்தில் இருவரும், மணிகண்டன் மீது பைக் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.அப்போது, மணிகண்டன் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டதால், இருவரும் தப்பித்து சென்றனர். படுகாயமடைந்த மணிகண்டன் சப்தம் கேட்டு அங்கு வந்தோர், அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து விசாரித்த தாலுகா போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சூரியபிரகாஷ், அருண்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இதையடுத்து,கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். சூரியபிரகாஷ், அருண்குமார் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கல்குவாரியில் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மறியல்
மணிகண்டனின் உறவினர்கள், பொதுமக்கள், கொலை செய்த இருவரும் ஜாமினில் வெளியே வராத வகையில் கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள், உடலை வாங்க மறுத்து, பொள்ளாச்சி -- உடுமலை ரோட்டில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.