| ADDED : மார் 12, 2025 12:44 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற ஓய்வு பெற்ற போலீஸ்காரர் உட்பட இருவர் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமர், 75; இவரது பேரன் சூர்யா, 25. இவருக்கு திருமணம் செய்வதற்காக ஆசனுாரில் ஜாதகம் பார்த்துவிட்டு, நேற்று மதியம், 1:00 மணிக்கு, பைக்கில் உளுந்துார்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அப்போது, இடியுடன் பலத்த மழை பெய்தது. சூர்யா, உளுந்துார்பேட்டை- திருச்சி சாலையில் அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள புளிய மரத்தின் கீழே பைக்கை நிறுத்தினார். உளுந்துார்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் காசிலிங்கம், 80, தன் மொபட் உடன் அதே மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றார்.அப்போது பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதில், ராமர், காசிலிங்கம் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.