| ADDED : மே 10, 2024 01:49 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, செக்போஸ்ட் பகுதியில் உள்ள மயானம் வாகனங்கள் நிறுத்தும் 'பார்க்கிங்' பகுதியாகவும், குப்பை கிடங்காகவும் இருப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செக்போஸ்ட் பகுதியில், மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள இடத்தில், 87 சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது.மயானத்தின் பரப்பு சிறிது சிறிதாக குறைந்து, வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யும் பகுதியாகவும், சுற்றுப்பகுதி குப்பையை குவிக்கும், குப்பை கிடங்காகவும் உள்ளது. இங்கு அடக்கம் செய்யப்பட்டவர்கள் நினைவாக கட்டப்பட்ட சமாதியும் இடிக்கப்பட்டுள்ளது.இறந்தவர்களை இங்கு அடக்கம் செய்ய தற்போது சிரமமாக உள்ளது. இப்பகுதி முழுவதும் குப்பையாக இருப்பதால் குப்பையை அகற்றி குழி தோண்டியபின், அடக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், சிலர் குப்பை கிடங்கில் உடலை அடக்கம் செய்ய வேண்டுமா என யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர். இங்குள்ள குப்பைக்கு அடிக்கடி தீ வைத்து எரிப்பதால், சுற்றுப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது.மயான இடத்தில் குப்பை கொட்டுபவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பையை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். வாகன 'பார்க்கிங்' செய்வதை மாற்றம் செய்ய வேண்டும். மயான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.இதுகுறித்து, கிணத்துக்கடவு தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த இடத்தை தூய்மைபடுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.